இறைவன் இருக்கின்றானா

============================
எரிகின்ற தணலெடுத்து இதயத்தில் பதுக்கிவைத்தே
=எழிலாகச் சுடுவோரை இரக்கமின்றி தந்தான்
மரியாதை இழந்தார்முன் மானமுடன் வாழ்வதெனும்
=மனம்படைத்துப் பதைக்கின்ற மனிதர்படைத் திட்டான்
நரிக்கூட்டத் திடைநாளும் நடமாடும் கோழியென
=நல்லவர்தம் வாழ்வதனை நலங்கெடவே செய்தான்
பரிமாறும் புன்சிரிப்பிற் பச்சோந்தித் தனந்தன்னை
=பசைபோட்டுத் தடவிவைத்தோர் பலபேரைக் கொடுத்தான்

பாவங்கள் செய்வதையே பழக்கமெனக் கொண்டவர்கள்
=பாதையிலே என்னாளும் பசுமைதனை வளர்த்தான்
கூவமெனும் நதியோடு குற்றாலம் நதியிணைத்து
=குளிப்போர்க்கு துர்நாற்றக் கொடுமைகளும் புரிந்தான்
தீவகத்தைப் போல்வாழ்வில் தனித்திருக்க நினைப்போர்க்கு
=தீராத துன்பங்கள் தேடிவரச் செய்தான் .
நாவதனைத் திறந்தாலே நலங்காமல் பொய்யுரைக்கும்
=நயவஞ்சகர் வாழ்வதற்கே நல்லவழி சொல்வான் .

மூடிவைத்துக் கழுத்தறுக்கும் மூர்க்கர்களின் வாழ்வினிலே
=முடியாத யாவையுமே முன்னின்று முடிப்பான்
வாடிவிட்ட பயிர்போல வாழ்கின்ற பேர்களுக்கோ
=வாராத மழைபோல் வஞ்சகமும் செய்வான்
கோடிகோடி பணமிருக்கும் கொள்ளையர்கள் யாவரையும்
=கொடுக்கும்மனம் இல்லாமல் குவலயத்தில் விடுவான்
தேடிநிற்கும் மானுடரின் தேடல்களில் கிட்டாமல்
=தெய்வமென கண்களுக்குத் தெரியாமல் வாழ்வான்.

நன்றிதனைக் குழிதோண்டி நம்பகமாய் புதைத்தவர்கள்
=நாய்வளர்பில் மும்முரமாய் நாட்டமுற வைத்தான்
பன்றியதன் அழுக்கெடுத்து பக்குவமாய் மனம்படைத்துப்
=பார்புகழ வாழ்வோர்க்குப் பக்கத்துணை இருப்பான்.
என்றுமிந்த உலகத்தில் ஏற்றத்தாழ் வோடுமக்கள்
=இருந்திடவே வகைசெய்து இறைவனென ஆனான்.
இன்றிருக்கும் வையகத்தை இயற்கையெனப் படைத்தவனும்
=இருக்குமிடம் தனைமட்டும் ஏன்மறைத்துப் போனான்?
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Dec-17, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 150

மேலே