அந்த கண்ணின் துளிகள்
அந்த கண்ணின் துளிகள்
என்னை உலுக்கினவை என் வாழ்வை அர்த்தமற்றதாக்கியவை
பிரசவம் முடித்து நானும் என்
குழந்தையும் நலமா என
பார்க்க வராத கண்கள்
பிரசவத்தில் மீண்டு உயிரோடு
வந்தாயே என்று நெகிழ்ந்து
துளிகளை விடாத கண்கள்
எத்தனையோ முறை ஆறுதல்
தேடி நான் பார்த்த பொழுது
வெறுமையாக இருந்த கண்கள்
சோர்ந்து இருந்த சமயங்களில்
மேலும் சோர்வடைய செய்ய
குரோதத்தை காட்டின கண்கள்
வாழ்வில் ஆண்டுகள் கடந்தாலும்
உணர்ச்சி வசப்படுவதில்லை என
உணர்வை காட்டாத கண்கள்
சாவு வரை சென்று மீண்டு வந்த
தன் நண்பனின் சாட்சியைக் கேட்டு
அந்த கண்கள் கலங்கின
என் கண்களும் கலங்கின
அதே காரணத்திற்கு அல்ல!
நான் வெறுமையாக்கப்பட்டதை உணர்ந்து என் கண்கள் பனித்தன
இதயம் வலித்தது தவித்தது
கண்கள் நீரை சொரிந்தது
இந்த எழுத்துகள் அந்த கண்களுக்கு
வெறுமையானவை அதை எழுதியவளும் அந்த கண்களுக்கு
வெறுமையே....
என் கண்கள் மூடும் பொழுது
அந்த கண்கள் வெறிக்குமா அல்லது பனிக்குமா?
பனித்தால் மூடிய என் கண்கள்
இளைப்பாறும்.