அர்தநாரீஸ்வரர் - என்னுள் நீ

உமையாளை உடன் சேர்த்த,
அர்தநாரியின் அடையாளம்!
இது தான் நீ தேடிக்
கொண்ட அங்கீகாரமோ?

பெண்ணின் ஓர் பாதி..
ஆணின் மரு பாதி..
இறைவனின் படைப்பில்
இவள் எந்த ஜாதியோ?

புஜங்கலில் புஷ்பங்கள்
படர்ந்திட..
கண்களில் கருணையும்
காதலும் கசிந்திட..
வீதி உலா செல்லும்
தாரகையோ?
எங்கள் திருநங்கை!

பெண்ணினமே பொறாமை
கொள்ளும் கொள்ளை அழகி - நீ,
ஆண்மையின் ஆணவம்
அகன்று சற்றே சலனமடைய
செய்யும் நங்கையே - நீ
அந்த ஆதாமின் தோழியோ?

ஓராயிரம் கேள்விகளை உனக்குள்
சுமந்து..
சிரிப்பை மட்டும்
சீர்வரிசையாக
சிங்காரிக்கும்
சுமைதாங்கி - நீ.

வாழ்த்துப்பாடல்,
திருவிழா கச்சேரி,
ஒப்பாரி,
ஒய்யார நடை,
ஓங்கிய பார்வை,
என்று விரும்பிய
திசையில் நீ பயணிக்க..

உன்னில் பலர்
பல வண்ணங்களில்
சிறகடிக்க..
ஏனோ சிலர்
மட்டும் கை தட்டி
அழைக்கும்
பிள்ளைகளாக பிரதிபலிக்க..
ஏனோ மனம்
சங்கடத்தில்
துவண்டு போகின்றது..

என் அன்பு தேழியே!
தாயார் ஒதுக்கிட,
தந்தையார் நகைத்திட,
தாங்க முடிய துயரத்தில்
தனித்து தவம் புரியும்
சினேகிதியே!
நீ ஆதிகேசவன் அருள் பெற்ற
கூத்தான்டவரின் பொக்கிஷம்..
நீ மனித குலத்தின் மூன்றாம் பால்,
ஆதியும் அந்தமும்
தீண்டாத மெய் பால்..
காலம் உன் கருவறைக்கு
பதில் சொல்லும்..

உன்னை தாங்கி செல்ல
கரங்களை தேடாதே..
தனித்து உயர்ந்திட
உன் தன்னம்பிக்கை தேர்த்தெடு..
உன் பாதையில் முள் கொத்துக்கள்
இருக்கட்டும்..
உடைந்து விடாதே..
பூத்துக்குலுங்கும் மலர் கொத்துக்கள்
காத்திருக்கும்!

என் அடுத்த பிறவியில்
நீயாக நான் பிறக்க ஆசை..
உன்னை மீண்டும்
உணர்ந்து கவிதை பாடிட ஆசை!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (22-Dec-17, 6:24 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 95

மேலே