பச்சை நிலம்
நிலத்தினில் பச்சை கண்டு
வருடங்கள் பலவாச்சு
வருணபகவான் மழையே தரல
வறட்சியே உழவாச்சு
உணவின்றி வறண்டு போனதால்
தசையெல்லாம் களவாச்சு
போராட்டமே வாழ்க்கை ஆனதால்
வாழ்க்கையே பிழையாச்சு
ஆறுகளும் குளங்களும் உண்டு
நீரெல்லாம் உறிஞ்சாச்சு
அணைகளும் தடுப்பும் உண்டு
தண்ணீரோ வடிஞ்சாச்சு
பசுமையும் சந்தோசமும் இப்போ
இரவினில் கனவாச்சு
வேதனையும் துக்கமும் தானே
தினம்தினம் உணவாச்சு
மரங்களும் போனது காய்ஞ்சு
மனமெப்போ மரத்தாச்சு
பாதத்தில் வெடிப்புகள் மறஞ்சு
முள்குத்த வலியாச்சு
மாடுகளும் ஆடுகளும் சோந்து
கறிக்கடையில் பலியாச்சு
ஒவ்வொன்னா இழந்திட இன்று
உணர்வெல்லாம் கிலியாச்சு
மாற்றங்கள் வருமா என்ற
கேள்வியும் மறைஞ்சாச்சு
ஏற்றங்கள் வாழ்வினில் எப்போ
பதிலின்றி தவிச்சாச்சு
மோட்சமாய் கண்ட பூமி
பாலையாய் ஆயாச்சு
சோலையாய் கண்ட பசுமை
எங்கோயோ போயாச்சு