பிறந்த நாள் ஏமாற்றம்
அன்பே ஆர்த்தி இப்படிக்கூப்பிட உரிமை இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் என் கவிதையின் கால்கள் இந்தக் காகிதத்தில் நடை பயின்று விட்டது !
பிடித்திருந்தால் உன் அறையின் புத்தகத்தில் வைத்துவிடு,
பிடிக்கவில்லை என்றால் சமையலறையின் அடுப்பில் போட்டுவிடு,
உன் பெயர் சொல்லி கூப்பிடத்தான் எத்தனைஆர்வங்கள்
என் உதடுகளுக்கும்,
உன்னை உரசுவதில்தான் எத்தனை ஆசைகள்
என் ஆடைகளுக்கும்,
உன்னைக் காண்பதில்தான் எத்தனை மகிழ்ச்சிகள்
என் கண்களுக்கும்,
உன்னை நினைப்பதில்தான் எத்தனை இன்பங்கள்
என் சிந்தனைக்கும்,
உன்னைக் கொஞ்சிடத்தான் எத்தனை ஆவல்கள்
என் நாவிற்கும்
நாட்காட்டியிடம் நாள்தோறும் நான் காட்டிவிடச்சொல்லி கெஞ்சினேன் உன் பிறந்த நாளை..,
உன் போல் அதுவும் பதில் கூற மறுத்தது,
வடம் பிடித்து இழுக்கும் தேர் ஊர் சுற்றி வருவதுபோல்
அடம் பிடித்து இழுக்கும் என் மனதிற்காக உலகமே சுற்றி இருப்பேன்
உனக்கான பரிசுப்பொருள் வாங்க.!
முன் அறிவிப்பின்றி உன் பிறந்தநாளை நீ சொல்லி சிரித்த போது
மண் அரிப்பின்றி மண்ணில் கிடைக்கும் பிணம் போல் ஆனேன்!
நான் வீடு திரும்பியதும்:-
ஏறிட்டுப்பார்த்த என் காலண்டரின் தேதியும்
வாய்விட்டுச் சிரித்தது இன்று உன் இறந்தநாள் என்று.
மின்கசிவு உறுதியான கட்டிடத்தையும் தீப்பற்றவைக்கும், அதுபோல்
உன் நினைவின் கசிவு பைத்தியமாக என்னை கவிதையும் தீட்டப்படவைக்கும்.
உன் வீட்டுக் கண்ணாடியை ஒரு நாளும் பார்க்க மறவாதே
மறந்தால் என் போல் அதுவும் உடைந்துவிடப் போகிறது.
உன் தலையில் வைத்த மல்லிகையும் கதறி அழுதது?
அதன் வாசத்தை விட உன் கூந்தலின் வாசமே அதிகம் என்று...!
எந்த வித விடுகதைக்கும் விடை சொல்லும் உன் விழிகள், இந்தப் பிரியம் இன்னும் தொடருமா என்று
தொடர்ந்து தொல்லை கொடுக்கும் என் மனதின் கேள்விக்கு பதில் கூற மறுப்பது ஏன்?