அரிமதி தென்னகனார்

இவன்
தென்னகனார் எனப் பெயர்கொண்டாலும்
பொன் அகனாகத்தான் வாழ்ந்தான்

அரிமதி எனப் பெயர்கொண்டாலும்
அறிவுமதியாகத்தான் வாழ்ந்தான்

தமிழகம் இழந்தது தென்னகனை
தமிழ் அகம் இழந்தது
தன்னை ஆண்ட மன்னவனை

அவன் புலவர்களுக்கெல்லாம் புலவன்
தமிழ்ப் பணியை இறங்காது
தன் நெஞ்சில் சுமந்த புள் அவன்

நாமெல்லாம் பேனாவில்
நீல மையை ஊற்றி எழுத
இவன் மட்டும் தன் புலமையை
ஊற்றி எழுதினான்

இவன் கைதான்
இளங் கவிகளுக்கு எதுகை
இவன் வீட்டு மனைதான்
எங்களுக்கு மோனை
இவன் கலைவாணி
கண்டெடுத்த வீணை
இவன் எழுத்தால்
நீளமாக்கினான் வானை

அரிமதியே
மதியை வர்ணித்தது
போதுமென்றா மதி அரியச் சென்றுவிட்டாய்

இவனிடம் கவிகற்றவர்கள்
கவிஞர்களாகவில்லை
கவிதைகளாகவே ஆனார்கள் .

இவன் இரவெல்லாம் உறங்காது
தமிழ் வளர்த்த ஆந்தை
இளம் கவிகளுக்கு தமிழ்பால்
ஊட்டி வளர்த்த ஆண் தாய்

யார் கிழித்துப் பறக்கவிட்டது
இவன் கவிதைகளை வானில்
கவிதை பிடித்துப்போன
எமன் இவனைப் பிடித்துக்கொண்டான் தன்னில் .

எழுதியவர் : குமார் (15-Jan-18, 11:45 am)
பார்வை : 85

மேலே