அஃறிணை பேசுகிறது

அஃறிணை பேசுகிறது

தமுஎகச கைலாசபுரம் கிளை திருச்சி 2017 அக்டோபர் 08 அன்று நடந்த பூச்சிகளின் தேசம் கருத்தரங்கில் நான் வாசித்த கவிதை. சிறப்பு விருந்தினராக திரு. கோவை சதாசிவம் அய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவிதையின் காணொளி வடிவம் காண இங்கு சொடுக்கவும் https://youtu.be/0V61ro-C3MQ தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே

பூச்சிகளின் பூமி இது
பூச்சிகளின் பூமி
ஆறறிவு கொண்ட இனம்
பரிணாமம் அடைவதற்கு முன்புவரை
இது பூச்சிகளின் பூமி

ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் என
பாழாய்ப்போன அந்த இனம்
படை எடுக்கும் முன்புவரை இது
பல்லுயிர்களின் பூமி

வேட்டை சமூகமென
நீங்கள் விரவிக் கிடக்கையில்
நாமெல்லாம் ஓரினம்
இது நமக்கான பூமி


உணவு சேகரிப்பில் சமுதாயம் இருந்தவரையில்
இது எல்லோருக்குமான பூமி

உணவு உற்பத்தியில் நீங்கள் இறங்கியபோது
இது உங்களின் பூமியானது

எங்கள் காடுகள் திருத்தப்பட்டு கழனியாகின
நாங்கள் அந்நியமானோம்
கழனிக்காக உங்களுக்குள் போட்டி வந்தது
நாங்கள் எதிரிகளானோம்
நீங்கள் மட்டும் செழித்தோங்க
எங்களில் எவரையும் அழிக்கத் துணிந்தீர்கள்

எங்கள் அறிவையெல்லாம் களவாடி
அறிவியல் என்றீர்கள்
எங்கள் நுண்ணுணார்வைப் படித்து
உள்ளுணர்வு என்றீர்கள்

எங்களோடு இயற்கை படித்து
வானியல் என்றீர்கள்
எங்களைத் துரத்தித் துரத்தியே
புவியியல் கற்றீர்கள்

கரையானிடம் கட்டடக்கலை
நத்தையிடம் உணரிகள்
சிலந்தியிடம் நெய்தல்
தும்பிடம் உலங்குஊர்தி
மின்மினியில் மின்சாரம்
மரவட்டையில் தொடா;வண்டி

இப்படி எங்கள் அறிவைக்
கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து
விஞ்ஞானம் சமைத்தீர்கள்

இன்று வளர்ந்துவிட்ட சமூகமாம் நீங்கள்
எங்களின் விபரச் சேகரிப்புகளை எல்லாம்
எங்களுக்கே எதிரியாக்குறீர்கள்
அறிவியல் தரவுகள் எழுதி எங்களை
அழிக்கப் பார்க்கிறீர்கள்

மெத்தப் படித்த மனித இனமே!
கொஞ்சம் காதுகளைக் கடன்கொடுங்கள்
ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என
தரம் பிரித்து வைத்திருக்கும்
உங்கள் மேதமைக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு
சக உயிரியாய் எங்களை அணுகுங்கள்

இது பல்லுயிர்களின் பூமி
பல்லுயிர்கள் வாழ்ந்தால்தான் பூமி
ஒரே ஒரு மதிப்பெண் கேள்வியாய்
நீங்கள் படிக்கும் உணவுச் சங்கிலியைக்
கொஞ்சம் உற்று நோக்குங்கள்
உணவுச் சங்கிலி அறுந்தால்
உங்கள் உலகம் வாழாது

எங்களின் இடையூறுகளைப்
பொறுத்துக் கொள்ளுங்கள்
நன்மைகளைப் பட்டியலிடுங்கள்
பணத்திற்கான பாடங்களுடன்
பல்லுயிர் வாழ்வையும் கொஞ்சம் படியுங்கள்

அறிவோடு மட்டுமின்றி
கொஞ்சம் அறமோடும் சிங்தியுங்கள்
எங்கள் காட்டையும் எங்கள் மீது காதலையும்
அதிகப்படுத்த உறுதி கொள்ளுங்கள்

முற்கந்தெறிக்கும் பல்லிகளைக் கண்டு
முகம் சுழிக்காதீர்கள்
நுண்ணுயிரிகளால் வரும் உதட்டுக் கொப்புளங்களுக்கு
பல்லி மீது பழி போடாதீர்கள்

கதாநாயகியைப் பயமுறுத்த மட்டுமே
உருவெடுத்ததாய் ஊடகங்கள் காட்டும்
கரப்பானை வெறுக்காதீர்கள்
எலுமிச்சை நறுமணத்தில்
புதிதாய் வந்திருக்கும் பூச்சிக்கொல்லி தெளித்து
கொன்றுவிட்டு வென்றுவிட்டதாய்
புளகாங்கிதம் அடையாதீர்கள்
இரக்கப்படுங்கள் அவற்றின்மீது.

தன் எதிர்யைத் தன் முதுகிலேயே
தெரியாமல் சுமக்கும்
அப்பாவி உயிரினம் அது
உங்கள் தொழிலாளி இனத்தைப் போல!!!

பட்டாம் பூச்சியைப் பிடித்துப்பாh;த்து ரசிக்காமல்
மனம் பிடித்து, பார்த்து ரசியுங்கள்
பூச்சிகளை அருவருக்காத
அடுத்த தலைமுறையை உருவாக்குங்கள்

காலுக்கடியில் கரையான் புற்று பார்த்தால்
பாதை மாறி நடக்கலாம் தப்பில்லை
உதிர்ந்த ஈசல் சிறகு பார்த்தால் அவற்றின்
ஒரு நாள் வாழ்க்கைக்கு வருந்துங்கள்

கொடுங்கோடையில் கொஞ்சம் நீரை
குருவிகளுக்காக வெளியில் வையுங்கள்
போத்தல் நீரில் நீங்கள் தாகம் தணிக்கலாம்
யானைகள் என்ன செய்யும் பாவம்!
பொதுவுடமையை எங்களுக்கும் சோ;த்துப் பேசுங்கள்

இறுதியாக ஒன்று…

ஒரே நாடு ஒரே இனம்
ஒருக்காலும் சாத்தியமாகாது
எங்கள் இனத்தை எப்போதும்
எவராலும் அழிக்கவே முடியாது

எங்கள் இனம் தேனீக்கள் அழிந்தால்
நான்கே ஆண்டுகளில்
மனித இனமும் அழிந்துவிடும்

இது பல்லுயிர்களின் பூமி
பல்லுயிர்கள் வாழ்ந்தால்தான் பூமி
பொதுவுடமையை எங்களுக்கும் சேர்த்தே பேசுங்கள்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (24-Jan-18, 8:45 pm)
பார்வை : 123

மேலே