கொடுத்து வாழ்
கொடுத்து வாழ்
கொடுத்து வாழும் வாழ்க்கையிலே
கொள்ளை இன்பம் இருக்குதடா
கொடுத்து வாழ்ந்த மனிதரையே
குவலயம் என்றும் வணங்குதடா
பொன்னும் பொருளும் கொடுப்பதினும்
அன்பைக் கொடுப்பது உயர்ந்ததடா
புன்னகை கொண்ட முகதுடனே
பேசுதல் அதனினும் உயர்ந்ததடா
பாரினில் வாரியே வழங்குபவர்
மாரியை நிகர்த்த மனிதரடா
ஓருயிர் தாவரம் வாழ்ந்திடவே
தேரினைத் தந்தவன் பாரியடா
அம்படிப் பட்ட புறாவிற்கு
அறுத்தான் தன்தசை சிபிமன்னன்
அவ்வையின் ஆயுள் நீடிக்க
அதியன் அளித்தான் நெல்லிக்கனி
கடையெழு வள்ளல்கள் தாம்செய்த
கொடையால் இன்றும் வாழ்கின்றார்
படைமிகு கர்ணன் கொடைசெய்தே
பாரதத்தில் தனிஇடம் பெற்றார்
ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தே
அன்னை தெரெசா வாழ்ந்தாரே
பாமரர் ஏழைக்கு நிலம்தந்தே
பசும்பொன் தேவரும் மகிழ்ந்தாரே
உணவோ உடையோ உறுபொருளோ
உவகையுடன் நீ கொடுக்கையிலே
உள்ளத்தில் நிறைவு தோன்றுமடா
உன்மனை விளக்கம் காணுமடா
ஆல்மரம் அதனின் நிழல்போல
அனைவர்க்கும் அன்பை நீதந்தால்
அன்னையும் தந்தையும் உனையடைய
என்தவம் செய்தேன் என்பாரடா
உனக்குள்ள தேவைக்கு மேலிருக்கும்
உபரியை பிறருக்கு உதவிடடா
ஈதல் ஒன்றேநம் இன்னுயிர்க்கு
ஊதியம் என்பதை உணர்ந்திடடா.
பாவலர். பாஸ்கரன்