கல்லூரிக்காதல் 13 முதல் 25 வரை

நகருமொரு பூ நீ
வளையாத வானவில் நீ
இல்லையில்லை…
நீ நீதான்…
நான் தான்
வேறாகிறேன்…
பித்தனென…

கல்லூரிக்காதல்-௧௪

நீ உன் மெளனத்தாலேயே
அறியப்பட்டாய்..
வெட்கப்படும்போதான
சிரிப்பு-
பேரிரைச்சல்…
நோக்கியாவின் ரிங் டோன் போல….

கல்லூரிக்காதல்-15

வரையப்படாத ஓவியமென-உன் உருவம்
பாடப்பெறாத ராகமென -உன் குரல்
அறியப்பெறாத வாசனை
உருமாறிய தெய்வம்…
இத்தனையும் புலம்பலல்ல-
நிஜமாகிப்போன பொய்…


கல்லூரிக்காதல்-16

நீ வருவதாயிருந்தால்
என் இறப்பும்
இன்னொரு
பிறப்பு…


கல்லூரிக்காதல்-17

அரிது அரிது
கூன் குருடு நீங்கிப்பிறத்தலல்ல..
உன் நெஞ்சுக்கினிய
பொம்மையாய் பிறத்தல்….

கல்லூரிக்காதல்-18
நீ சுருட்டி முடிந்த
கூந்தலென
கசங்கிக்கிடக்கிறது
மனசு…
குரங்காட்டியின் சொல்லுக்காய்
காத்திருக்கும் குரங்கெனவே –நான்



கல்லூரிக்காதல்-19
இதயத்தை கையருகே வைத்திருக்கலாம் இறைவன்
அடிக்கடி திறந்து காண்பிக்க வசதியாய்-
நீதானிருக்கிறாய்- நம்பு


கல்லூரிக்காதல்-20
எல்லாவற்றிலும்
நூற்றுக்கு நூறு-எடுத்துவிடும் நான்
காதல் பாடத்தில்-அரியர் வைப்பது
மீண்டும் மீண்டும் படிக்கும் சுகத்திற்காய்…


கல்லூரிக்காதல்-21
இந்தக் கல்யாணத்தில் எனக்கு
எல்லோரும் அன்னியம்
உன்னைத்தவிர
எனக்கு எல்லோரும்-உறவு
உனக்கான பின்…

கல்லூரிக்காதல்-22
உயிர் போனாலென்ன
காற்றெனவே நான்
உடல்போனாலென்ன
எரியா எலும்பெனவே நான்
எதுவானாலென்ன
எப்போதுமிருப்பேன் உன்னோடே
நினைவுகளாய்….
கல்லூரிக்காதல்-23
அதே உளி
சிற்பமும் அதுவே
நடுகல்லும் அதுவே
முடிவு உன் கையில்
சிற்பமா நடுகல்லா
நீயே சொல்…

கல்லூரிக்காதல்-24
என் எல்லாக் கடிதங்களையும்
என் கண்முன்னே எரித்தாய்
சாம்பலென தொடர்ந்தது அவை
உடலெங்கும் ஒட்டி…

கல்லூரிக்காதல்-25
அன்றைக்குத்தான் தெரிந்தது
உன் வீடிருக்கும் சாலை
இனி பக்தர்களால் நிரம்பும்
கோயில் தெரு….
தரிசன தேவதை நீ

எழுதியவர் : rishisethu (8-Feb-18, 4:11 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 94

மேலே