சேர்வது மட்டும் காதலல்ல
பசுமையாக இருந்த
உன் நினைவுகள்..
சருகுகளாக மாறிக் கொண்டிருக்கிறது..
நீ பிரிந்த பின்...
என் பிரிவு உனக்கெப்படியோ,
தெரியவில்லை,
நீயும் என்னை எப்போதாவது நினைத்து இருக்கலாம்..
ஆனால் நானோ எப்போதும் உன் நினைவுகளையே அலைக்கழிக்க பட்டுக்கொண்டிருக்கிறேன்..
உயிரை மாய்த்து கொள்வது எளிதென நினைத்து முயன்றிருக்கிறேன்,
என் மரணத்தின் சுடு சாம்பல்கள் உன்னை குற்ற உணர்வெனும் புதைகுழிக்குள் அமிழ்த்திடுமோ என்றே கோழையாய் பின்வாங்கி விட்டேன்..
ஒருவேளை நான் மரணித்து தெரியாமல் கூட நீ வாழலாம்,
என் மரணம் யாருக்கும் பாடமாய் இல்லாமல் வெறுமென தீக்கிரையாக்க விரும்பவில்லை..
மீண்டொருமுறை உன்னை பார்த்தேன் உன் மணாளனுடன்..
உன் கண்களுக்கு அகப்படாத தொலைவில் நின்றவாறு..
நீ சந்தோசமாய் இருப்பதை உன் முக குறிப்பால் உணர்ந்தேன்..
நானும் உன்னை போல சந்தோசமாக இருப்பதை போல உனக்கு தெரிய படுத்தி இருக்கலாம் ,
இல்லை உன்னை மறந்து சாதாரணமாய் இருப்பதாகவும் காட்டி கொள்ளலாம்,
ஆனாலும் ஏதோ ஒன்று என்னை உறுத்தியது...
தழும்புகளை மீண்டும் கீறி புண்ணாக்கி
துர்நாற்றமாய் மாறிவிடுமோ என்றெண்ணி,
தீக்கிரையாகிய என் சிறகுகளில் ஒன்றை பிய்த்தெறிந்து
என் ரணங்களை வருடி கொண்டேன்...
சேர்வது மட்டும் காதலல்ல..
பிரிந்த பின்னும் சேராத காதலை வாழ விடுவதும் காதல்தான்.....