காதலர் தினம்

யாருக்கும் தெரியாமல்
பின்கட்டுக்
கதவு வழியே வந்து
பிரசன்னமாகியிருந்தார் -
கடவுள்
யோகமுத்திரையும்
ருத்திராட்சமும் தரிக்காமல்
ஆபரணங்களற்று வந்திருந்த
அவரைப்பார்க்க
என்னவோ போலிருந்தது
தாகத்துக்கு
நீர்கேட்டு வந்ததாய்
சொல்லி
சோகம் அப்பிய விழிகளோடு
சோர்ந்து போயிருந்தவருக்கு
தண்ணீர் பாட்டிலொன்றைத்
தலைதிருகி கொடுத்தேன்
நன்றி சொன்னவர்
மெல்லத்தயங்கி
கைமாத்தாய் கொஞ்சம்
கடன்கேட்டார்
கடவுளுக்கே கடனா....
திகைத்துப்போன நான்
அவரிடம்
ஆதார் அட்டை பான்கார்டு
அட்ரஸ் கேட்க......
திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன்
பின்கட்டுக்கதவு அருகே
பேச்சுக்குரல் கேட்டது
கனவில் கேட்ட
கடவுளின் குரல்
"அப்பத்தாவும் தம்பியும்
முழிச்சுக்கிடப் போறாங்க
அப்புறமா சந்திப்போம்"
என்றாள் அக்கா
காதலர் தினத்துக்கு
பூகொடுத்துப்போக வந்திருந்த-
கடவுளிடம்........!

அழ. இரஜினிகாந்தன்

எழுதியவர் : (15-Feb-18, 8:42 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 57

மேலே