‘இன்றைய நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் ஆதிக்கத்தால் மனிதர்களுக்கிடையே நேரடி உறவு முறைகள் குறைந்து, சமூகப்பண்புகளும் குறைந்து வருகின்றன’- இக்கூற்றைப் பற்றிய உனது கருத்துகளை விவரிக்க

‘இன்றைய நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் ஆதிக்கத்தால் மனிதர்களுக்கிடையே நேரடி உறவு முறைகள் குறைந்து, சமூகப்பண்புகளும் குறைந்து வருகின்றன’- இக்கூற்றைப் பற்றிய உனது கருத்துகளை விவரிக்க.

அறிவுலகத்தின் உச்சத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது மானுடம். மனிதகுலம் தோன்றிய நாளிலிருந்து முன்னெப்போதும் அடைந்திராத, துய்த்திராத நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை உலக மனிதன் அடைந்திருக்கிறான். தூரம், நேரம் இரண்டையும் சுருக்கவும் சுகிக்கவுமான சூத்திரங்களைக் கண்டறிந்து
நவீன மனிதன், பிரபஞ்சமெங்கும் சிதறிக்கிடக்கிற அறிவுச் செல்வங்களைக் கைக்கெட்டும் தன் வீட்டுக்குள் வைத்து அனுபவிக்க விழைகிறான். எட்டுத் திசைகளிலும் அலைய முடியாத மனிதன், எல்லாத் திசைகளையும் தன் திசைக்கு இழுக்கவே ஏற்பாடு செய்கிறான். நிறைந்த அறிவு பெறத் துடிக்கிறான், தனக்கிருக்கும் குறைந்த நேரத்தில். ஆனால் இந்த நவீன துடிப்பு மனிதர்களுக்கிடையே உள்ள நேரடி உறவு முறைகளைக் குறைத்து, சமூகப்பண்புகளின் அடிப்படையே மாற்றியமைத்து நம்மை திசை மாற்றுகிறதோ என்பதே பலரின் அச்சம். இந்த பயம் உண்மையாகிவிட்டது என்று கூறினால் யாராலும் மறுக்க இயலுமா?

நவீன தொடர்புச் சாதனங்கள் நமக்கு அளவிலடங்கா நன்மைகளைச் செய்துள்ளன. இருந்த இடத்திலிருந்தே உலகெங்கும் நடக்கும் விஷயங்களை அறிந்து, பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவதோடு மாணவர்களின் கல்வி சார்ந்த ஒப்படைப்புகளையும் செவ்வனே செய்து முடிக்க துணைப் புரிகிறது. அன்று ஏடு தூக்கிப் பள்ளி சென்ற மாணவர்கள் இன்றோ “ஐ பாட்” போன்ற நவீன தொடர்புச் சாதனங்களுடன் செல்கின்றனர். இணையத்தின் வாயிலாகவே பாடத்தைக் கற்கின்றனர். ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் இணையத்தின் வாயிலாகவே தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் பள்ளிக்கு சென்று, நேரடியாக ஆசிரியரைப் பார்த்து பாடம் கற்பதைப் போல் ஆகிவிடுமா? வகுப்பறைகளில் ஆசிரியர்கள் புகட்டுவது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமன்று, அவர்கள் தங்கள் தங்கள் வாழ்வில்
சுவைத்த அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் தான். ஆக, நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் வருகையால் நிச்சயமாக மனிதர்களுக்கிடையே நேரடி உறவு முறைகள் குறைந்து வருகின்றன!

கடல் கடந்து சென்றுவிட்ட போதிலும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள் ஆகியோருடன் நேருக்கு நேர் பேச உதவிப் புரிகிறது இன்றைய அதிநவீனம். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் பல மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வியைக் கற்க ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரொப்பா போன்ற நாடுகளுக்கு செல்வதால் தங்களுடைய பெற்றோர்களை பார்க்க ஏங்கும் மாணவர்களுக்கு ‘skype’ எனப்படும் நவீன தொடர்பு சாதனம் பெருந்துணைப் புரிகிறது. அது மட்டுமா பல காலம் சந்திக்காத நண்பர்களுடன் உறவாட கைக்கொடுக்கிறது. சமூக இணையத் தளமான ‘facebook’. இவ்வாறு உறவுகளை மேம்படுத்தும் நவீன தகவல் தொடர்புச் சாதனங்களைக் குறைக் கூறுவது பொருத்தமற்ற செயல் எனக் கூறலாம்.

ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது அந்நாட்டின் அரசாங்கம். அரசாங்கத் தலைவர்கள் அனைவரும் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றுக்கு ஏற்றவாரு சேவை புரிதல் அவசியமாகும். ஏனெனில் அப்பொழுதுதான் தங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என கோலமிட்டு லிபியா, சிரியா போன்ற நாடுகளில் வெடிக்கும் கலவரங்களைப் போல் சிங்கப்பூரிலும் வெடிக்காது. இவ்வாறு நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன் அவற்றை முழுமையாக அறிய, அவர்கள் நாடும் சக்தி வாய்ந்த ஊடகங்கள் தகவல் தொடர்புச் சாதனங்களையே. சமீபத்தில் சிங்கப்பூரில் இடைத்தேர்தல் நடைப்பெற்றபொழுது மனுத்தாக்கல் செய்தவர்கள் பலர் இணையத்தின் வழியே மக்களுடன் இணைந்தனர். மக்களுடைய கருத்தகளையும் அறிந்து தெளிவு பெற்றனர். பல பில்லியன் மக்கள் தொகைக் கொண்டுள்ள நாடுகளில் நாட்டுத் தலைவர்கள் மக்களுடன் இணைக்கும் பாளமாக விளங்கும் தகவல் தொடர்புச் சாதனங்கள் கைக்கூப்பி வணங்த்தக்கவையே!
மனிதன் தன்னுடைய அறிவாற்றலை வளர்க்கவும் பட்டறிவை மேம்படுத்திக்கொள்ளவும் தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் உதவுகிறது. இருட்டறையில் தூங்கிக்கொண்டு உலகம் என்ற பரந்த மைதானத்தை உலா வர உதவுகிறது தகவல் தொடர்புச் சாதனங்கள். கடல் கடந்த போதிலும் உறவுகளைச் சந்திக்கவும் உதவுகிறது. ஆனால் இவை மனிதனுடைய கண்ணோட்டத்தையும் மாற்ற்றியமைத்துவிட்டது. பண்புநலன்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறது.
பெற்றோர்கள் குடும்பத்தின் அஸ்த்திவாரத்தை அமைக்கும் முக்கிய நபர்கள். ‘குடும்பம் ஒரு கோயில், அதில் தாயும் தந்தையும் இருவரும் தெய்வங்கள்’ என்று நம் முன்னோர்கள் கூறி கேட்டிருப்போம். ஆனால் இன்றைய பணவேட்கை சமூதாயத்தில் இரு பெற்றோர்களை வேலைக்கு சென்றால் தான் சொகுசான வாழ்க்கை வாழ முடியும் என்று வாதிடுகின்றனர். இதனால் பெற்றோர்களை நேரில் காண வாய்ப்பில்லாமலேயே சில பிள்ளைகள் ஏங்கியுள்ளனர். இவர்களின் ஏக்கத்தை அறியாமல் பெற்றோர்கள் சிலர் பக்கத்து அறையில் இருக்கும் பிள்ளைகளுடன் கைத்தொலைப்பேசியின் மூலம் சாப்பிட்டாயா, பாடம் செய்தாயா என குறுஞ்செய்தி அனுப்பி வைக்கின்றனர். அம்மாவின் சுட்டில் வளரும் பச்சைக் குழந்தைக்கே தாய் பாசத்தின் முழு அர்த்தம் புரியும். ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கும்பொழுது தாய்ப்பாசம் என்ன என்று வினவும் நிலைக்கூட பிறக்கக்கூடும் என நம்ப தோன்றுகிறது. ஏனெனில் இன்றைய நவீன தகவல் தொடர்புச் சாதனங்கள் சமூகப்பண்புகளை மட்டுமின்றி குடும்பப் பண்புகளையும் சின்னப்பின்னமாக்கி வருகின்றன.

‘தான் ஆடாவிட்டலும் தன் தசை ஆடும்’ என்று கூறியதற்கும் காரணம் உண்டு. உறவுகளே நமக்கு கஷ்டக்காலங்களில் உடன் நின்று ஆறுதல் அளிக்கும். அதே உறவு முறைகளே விழாக் காலங்களிலும் விசேஷங்களிலும் கலந்துகொண்டு அளவில்லா மகிழ்ச்சியைத் தரும். ஆனால் இன்றோ தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால்

திருமண பத்திரிக்கைகளையே மின்னஞ்சல்(e-mail) மூலம் அனுப்பி வைக்கினர். சொந்தங்கள் தூர இருந்தாலோ அல்லது தூரத்து சொந்தமானாலோ இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ள்ப்படும். ஆனால் முக்கிய உறவகளான தாய்மாமன், மாமன், மைத்துனன் போன்றவர்களுக்கே இந்த கதி என்றால் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பழிப்பதைத் தவறு வேறு வழியில்லை. தாய் மாமன் சீர் வரிசை என்றாலே தனி சிறப்புப் பெற்றுத் திகழும் சம்பிரதாயத்துக்கு பங்கம் என்றால் தகவல் தொடர்புச் சாதனங்களைத் தூற்றுவதில் தவறேதும் உண்டோ? பல வேலைகளை எளிமையாக்கி மனிதனின் வேலை பளுவைக் குறைத்த போதிலும் சமூகப்பண்புகளின் கேட்டிற்கு வழி செய்துள்ளது இச்சாதங்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

மனிதனை மனிதன் மதிக்கும் சமூகப்பண்பு ஆதிகாலத்தில் அதாவது, மனிதனுக்குப் பசி எடுத்தப்பொழுது பிற மனிதனைத் தின்ற காலத்தில் வேண்டுமானால் இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நல நாகரிகம் பெற்றுத் திகழும் மனிதர்களிடத்தில் இச்ச்மூகப்பண்பு இல்லை என்றால் என்னவென்று கூறுவது! சமூக இணையத்தளங்களில் சமீபத்தில் இடம்பெற்ற மதிப்பற்ற கருத்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லையா? சிங்கப்பூரிலேயே படித்த சீன மாணவர் சிங்கப்பூரர்களைப் பற்றியே தரக்குறைவாக எழுதினார். பிறரின் உணர்வுகளை மதிக்கா அவல நிலை! தான் சொல்லும் விஷயம் யாரால் சொல்லப்பட்டது என்பதைக் கண்டறிய முடியாது என அலட்சியமாக சற்ற நவீன தகவல் தொடர்புச் சாதனங்கள் தூண்டவில்லையா?

சுருங்கக்கூறின் உறவுமுறைகள் கண்ணடியைப் போன்றது. அதைப் பார்க்கப் பார்க்கத்தான் பிம்பம் தென்படும். அதைப்போலவே உறவுமுறைகளும் பழக பழகவே வளர்ந்து உறுதியாகும். இச்சாதனங்கள் நேரடி உறவு முறைகளைக் குறைத்துவிட்டன என புலம்புவதை விட்டு மனிதன் சுயமுயற்சியுடன் உறவுகளை மேம்படுத்த முற்பட வேண்டும். அதைவிடுத்து, “எய்தவன் இருக்க அம்பை நோகும்” பாணியில் தகவல் தொடர்புச் சாதனங்களின் மீது வீண் பழி சுமத்தக்கூடாது. பண்புகளையும் அவற்றின் கோட்பாடுகளையும்

அறிந்த மனிதனுக்கு, இந்நவீன தகவல் தொடர்புச் சாதனங்களையே உலகிற்கு அறிமுகப்படுத்திய மனிதனுக்கு அவற்றை எவ்வாறு செயற்கரிய முறையில் பயன்படுத்துவது என்பது தெரிந்திருக்கும் இச்சாதனங்களின் மகிமையை உணர்வோம், அவற்றை நம்முடைய ஆக்கத்துக்கு பயன்படுத்தி உயர்வோம்!

எழுதியவர் : மாதிஹ் (15-Feb-18, 7:06 pm)
சேர்த்தது : மாதிஹ்2000
பார்வை : 3483

மேலே