காசு நல்குவீர்-நாளொரு பாடல்-8

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.

இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.

பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.





நூல் : முதலாம் திருமுறை
ஆசிரியர் : திருஞானசம்பந்தர்
பதிகம் : திருவிழிமிழலைப் பதிகம்(92)
பாடல்கள் : 1-11


முன்னோட்டம்:
ஞானசம்பந்தப்பெருமானும்,திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.நாவுக்கரசர் முதிய பிராயத்தில் 60 வயது அளவில் இருந்தபோது,பிள்ளையாருக்கு பால வயது.
பிள்ளையாரின் அருமை பெருமைகளை உணர்ந்த வாகீசர்,அவரைத் தேடி வந்து அளவளாவி, இருவரும் சில காலம் பல தலங்களுக்குச் சேர்ந்து சென்று வழிபட்டனர்.அக்கால கட்டத்தில் திருவிழிமிழலைப் பகுதியில் இருவரும் தங்கியிருந்த போது ஊரில் பஞ்சம் நிலவியதால்,அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு,சிவபெருமான் பிள்ளையாருக்கும் வாகீசருக்கும் தினமும் ஒவ்வொரு பொன் படிக்காசு,கோவிலின் கிழக்கு, மேற்கில் அமைந்த விருட்சப் படியில் வழங்குவதாக கனவில் அருளி,தினமும் காசு வழங்கலானார்.
இதில் பிள்ளையாருக்கு வழங்கிய காசு சிறிது மாற்று குறைவாக இருந்ததால்,அவருக்குப் பொற்காசின் மூலம் கிடைத்த பொருள் சிறிது குறைவாகக் கிடைத்தது.
பிள்ளையார் இறைவரிடம் வருந்தி வேண்டி,இந்தப் பதிகம் பாட இருவருக்கும் நல்ல மாற்றில் பொற்காசு கிடைக்கப் பெறலானது.


மாசிலாக் காசு !

பொருள்:

1
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.

வாசி- உயர்வு தாழ்வு, மாசு- குற்றம், ஏசல்-ஏசுவது,நிந்திப்பது

குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக..

2
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

கறை கொள்- குற்றமுள்ள, முறைமை- ஒழுங்கு செய்தல்

நீரே இறைவராக இருக்கின்றீர்,வேதநெறிகளோடு இருக்கும் மிழலையில் நீரே இறைவராக இருக்கிறீர்..குற்றமுடன் அளிக்கப் படும் காசை,சரி செய்து முறைப்படுத்தி,தூய பொற்காசாக வழங்குவீர்..


3
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

செய்ய-சிவந்த ; மெய்கொள்- உண்மை நிரம்பிய ; பை - படம் ; அரவு - பாம்பு ; உய்ய- உயர,மேல்நிலையடைய,

படம் எடுத்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு,சிவந்த மேனியைக் கொண்டு,உண்மை நிரம்பிய மக்கள் வாழும் மிழலையின் இறைவரே, நான் உய்யுமாறு குறைவற்ற காசை வழங்குவீர் !


4
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.

நீறு- திருநீறு ; ஏறு- எருது(ஆநேறு); கூறு- கூறப்படும்,புகழப்படும்; பேறு- பெரும் செல்வம், வீடுபேறு என்னும் முக்தி

திருநீறு அணிந்து எருதின் மேலேறித் திகழ்கின்ற, பெரும் புகழ் படைத்த, மிழலையின் இறைவரே, (குறைவற்ற காசை நல்குவதோடு) எனக்கு வீடுபேறையும் அருளிச் செய்வீர்.


5
காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

காமன்- மன்மதன்; தூமம்- புகை; தூமக்கண்- புகையுடைய தீக்கண்ணான நெற்றிக்கண் ; நாமம்-பெயர்,புகழ் ; சேமம்-பாதுகாவல், ஷேமம் என்பதன் திரிபு என்றும் ஒரு பாடபேதம் இருக்கிறது

மன்மதனை எரித்த, தீஞ்சுடரை உடைய நெற்றிக்கண்ணை உடைய, புகழ் பொருந்திய மிழலையின் இறைவரே, (குற்றமற்ற காசை வழங்குவதோடு) எமக்குப் பாதுகாவலும்,அரணும் வழங்கி எம்மைப் பாதுகாத்தருள்க..



6
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.

பிணிகொள்- கட்டப்பெற்ற,பிணித்தல் என்றால் கட்டுவது என்பதும் ஒரு பொருள்; மிடறு- தொண்டை, கண்டம் ; அணி- அழகிய ஆபரணம்

கட்டப்பட்ட சடையும், கண்டத்தில் மணியும் கொண்டவரே, அழகிய அணிகலண்களை அணிந்த, மிழலையின் இறைவரே, எம்மை ஆட்கொண்டு, பணி கொண்டு அருளுவீர்..


7
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

பங்கு- பகுதி ; துங்கம்- உயர்வு ; சங்கை - சந்தேகம் ; தவிர்- நீக்கு

அம்மையை ஒரு பாகமாக உடைய, உயர்வுடைய மிழலையின் இறைவரே, கங்கையை முடிமேல் கொண்டிருப்பவரே, எங்களது ஐயத்தைத் தவிர்க்க, (குறைவற்ற காசை வழங்கி அருள்க..)


8
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே.

நெரிதர- அகப்பட்டு நெரிய ; பரக்கும்- எங்கும் புகழ் பரவிய ; கரக்கை- வஞ்சம்

இராவணன் மலைக்கு அடியில் அகப்பட்ட நெரிபடும் போது அவனுக்கு இரக்கம் காண்பித்தீர், எங்கும் புகழ் பரவிய மிழலையின் இறைவரே, எமக்கு வஞ்சம் செய்வதைத் தவிர்த்து (குறைவற்ற காசை நல்குவீர்).


9
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.

அயன்-நான்முகன் ; மால்-திருமால் ; முயலும்-முயற்சித்த ; முடி - அடியும்,முடியும்(குறிப்பால் அமைந்த சொல்) ; இயலும்- அனைவருக்கும் இயலும் நிலையில் ; பயன் - பிறவியின் பயனான வீடுபேறு

திருமாலும் நான்முகனும் தேடி அடைய முயன்றாலும் முடியாத அடியையும் முடியையும் கொண்டிருந்தாலும், (உனது அடியவர்களுக்கு) எளிதில் அடையத்தக்க நிலையில், மிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, எமக்கு பிறவியின் பயனான வீடுபேறை அருளுவீர் !


10
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.


பறிகொள் - முடியைப் பறித்துக் கொண்ட நிலையில் ; அறிவது- அறிய வேண்டிய ; அறிகிலார் - அறிய மாட்டார் ; வெறி - மணம் ; பிறிவது-பிறவாக இருப்பது, பிரிவது ; அரியது- கடினமானது

தலைமுடியைப் பறித்து கொண்ட நிலையில் தலைகளையுடைய சமணர்கள், அறிய வேண்டிய உண்மைகளை அறிய மாட்டார்; மணம் பொருந்திய மிழலையின் இறைவரே, உம்மைப் பிரிந்து இருப்பது இனி மிகக் கடினமானது.


11
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.

காழி-சீர்காழி ; வாழி- வாழ்கின்ற வீழி மிழலை- திருவிழீ மழலை; தாழும் - தாழ்ந்து போற்றி

சீர்காழியில் தோன்றி வாழ்ந்த சம்பந்தனான அடியேன், திரு விழீமிழலையில் வீற்றிருக்கும் இறைவரைத் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகள் இவை.




டிட் பிட்ஸ்:


திருவீழிமிழலையில் திருமால் சக்கரம் வேண்டி ஈசனைப் பூசிக்கும் போது,ஒரு மலர் குறைந்தால்,தன் கண்ணை மலராக ஈசனுக்கு சமர்ப்பித்ததால், திருவிழிமிழலை என்ற பெயர் பெற்றது.
பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்றுத் திகழ்ந்ததால், ஈசனுக்கு மகவு போன்ற உரிமையும், திண்மையும்,வலிமையும் உடையப் பெற்றவராக விளங்கினார். அவரது பாடல்களிலும் அந்த உரிமையும், சக்தியும் திகழ்ந்ததாக அறிஞர் போற்றுவர்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிறந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பிய வாக்கு.இறைவனின் அருள் பெற்ற குற்றமற்ற சொற்களையுடைய மனிதர்களின் வாக்கு, மந்திரத்திற்கு ஒப்பானதாகும் என்பது விளக்கம்.
இன்றைய நாளில் வழக்கு மன்றங்கள் அல்லது அரசிடம் ஒரு தனிமனிதர்,தமது உண்மை நிலையை அறிவிக்க நேரும் போது,பிரமாணப் பத்திரம்-affidavit - தாக்கல் செய்வது சட்டப்படி தேவையான ஒன்று.அதில் நான் கூறுவனவற்றை நாமே, உண்மை என்று சான்று அளிக்க வேண்டும்; அவ்வாறு சான்று அளித்தபின், சான்று அளித்தவர் அவரது கூற்றிலிருந்து பின்வாங்க அரசோ, சட்டமோ அனுமதிப்பதில்லை. அது போலவே பிள்ளையாரின் பதிகங்களில் கடைசிப் பாடலான பதினொராவது பாடல், பதிகத்தின் பலனை உறுதியாக அறிவிக்கும் படியான டிக்ளரேஷன் பதிகங்களாகவை அமையப் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப் பெருமானின் அனைத்துப் பதிகங்களிலும் பார்க்கலாம்.
இறைவனின் பூரண அன்பும், சொல்லும் வாக்கெல்லாம் மந்திரமாகவும் திகழ முடிந்ததனாலேயே அவரால் அவ்வாறு உறுதி கொடுக்க முடிந்தது என்பதும் முடிந்த முடிவு-டிரைவ்ட் ட்ரூத்.
அதனாலேயே பிள்ளையாரின் பதிகங்கள் மந்திரமொழிகள் என்றே அறியப் படும்
இந்தப் பதிகத்தை பக்தியும் அன்பும் கொண்டு ஓதி வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு ஏற்படுவதோடு, உலக வாழ்வில் சேர்த்த பொருள் அழியாது வளரும் வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.



அருளும் செல்வமும் வளர்க எந்நாளும் !

இந்தப் பதிகம் பாடல் வடிவில். பாடல் அடியேன்..அவ்வப்போது இவ்வித பயங்கரவாத செயல்கள் பதிவில் நடக்கலாம் என்ற எச்சரிக்கையையும் இப்போதே வைக்கிறேன். :)









ழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன்

எழுதியவர் : (9-Mar-18, 12:50 pm)
பார்வை : 82

மேலே