இரண்டு முகம்
ஜெ
நான் இப்போது ஒரு பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறேன். எப்படியென்றால் வட்டிக்கார கிழவியை கொலை செய்யப்போகும் ரஸ்கோல்னிகோவ் மனநிலயைப்போல.2016 ல் கல்லுரி முடித்ததும் .ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன் துளியும் வெலை ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு விட்டேன் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறேன்
போட்டித்தேற்வுகளுக்கு படிக்கவும் மனம் ஒப்ப மறுக்கிறது. இலக்கியம் வாசித்தல் தவிர வேறு ஒன்றிலும் நாட்டம் இல்லை.சில தனிமைப் பயணம்க்கள் மேற்கோண்டேன் அது இன்னும் என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது எனக்கான பாதை எது என தெரியாமல் குழம்பித்தவிக்கிறேன். உங்க்களின் பதிலை எதிர்பாற்கிறேன்
கதிர்
அன்புள்ள கதிர்,
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்.
சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இதைப் பேசிப்பேசி சற்று தெளிவுகொள்ளவேண்டியிருக்கிறது. ஏதோ ஒருவகையில் இவற்றைக் கேட்கவேண்டிய இடமென என் தளம் இருக்கிறது போலும். நான் இதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதவேண்டியிருக்கிறது.
முதல் தெளிவு ஒன்று தேவை. நம் சிற்றிதழ்ச் சூழலில் தோல்வி கொண்டாடப்படும் மனநிலை ஒன்றுண்டு. இலட்சியத்தின்பொருட்டு, கனவுகளின்பொருட்டு, அர்ப்பணித்துக்கொள்வதைக் கொண்டாடுவது. ஓர் எல்லைவரை அதுதேவைதான். மகத்தான கனவுகள் அவற்றின்பொருட்டே கொண்டாடப்பட வேண்டியவைதான். ஆனால் தோல்வியைக் கொண்டாடுவதாக அது ஆகக்கூடாது. அதன்பின் தோல்வியடைவதே இலக்கு என்று கொள்ளத் தொடங்கிவிடுவோம்.
எதையும் ஆற்றாமல் வெறுந்தோல்வியை மட்டுமே அடைந்தவர்கள் அதைப்பற்றி மீளமீளப் புகழ்ந்து சொல்லும் காலம் இது.நான் பேசுவது இச்சூழலில் வெற்றியடைவதற்கான வழி. இதுவே இங்குள்ள குறைந்தபட்ச வழி, இதனூடாகச் சென்று வெல்வது ஒவ்வொருவரின் தனித்திறன்.
சில பொது அவதானிப்புகளைச் சொல்கிறேன். நம் சூழலில் எவராயினும் தனக்குரிய செயற்தளத்தை, தன்னை நிரூபிக்கும் களத்தை, கண்டடைய சாதாரணமாக 25 வயதாகிறது. நானே ஆன்மிகம், அரசியல் என இரு களங்களில் முட்டி அவை எனக்குரியவை அல்ல என்று உணர்ந்தபின்னர்தான் முழுமையாக இலக்கியத்தை வந்தடைந்தேன். என்னை அங்கே நிலைநிறுத்திக்கொண்டேன்.
ஆகவே அதுவரை உறுதியான அறுதியான முடிவுகள் எடுக்காமலிருப்பதும், பாலங்களை பின்னால் எரித்துவிடாமலிருப்பதும் முக்கியமானது. ஏனென்றால் மேலைநாடுகளைப்போலன்றி இங்கே உலகியல் வாய்ப்புகள் மிகக்குறைவு. வாய்ப்புகளுக்காக பலலட்சம்பேர் முட்டிமோதும் நாடு. அதற்கென்றே வாழ்பவர்களுடன் வேறு கனவுகள் கொண்டவர்கள் போட்டிபோடவேண்டியிருக்கிறது. அவர்கள் அதில் பின் தள்ளப்படும் வாய்ப்பு அதிகம்.
அதை நோக்காமல் பின்நகரும் வழிகளை கைவிட்டு முன்னால் சென்றால் நாம் விரும்பாதவற்றில் மாட்டிக்கொள்ள நேரிடும். அல்லது வெறும் உப்புபுளிக்காக மொத்தவாழ்க்கையையே விற்றுக்கொள்ள நேரிடும். இரண்டும்தான் மானுட வாழ்க்கையின் அவலங்களில் தலையாயவை,
அந்த பின்னகரும் வாய்ப்பு என்பதை ஒரு ‘குறைந்தபட்ச உத்தரவாதம்’ என நான் வரையறை செய்வேன். எனக்குப்பிடித்த இலக்குநோக்கிச் செல்வேன், ஆனால் எப்போதும் குறைந்தபட்சம் ஒன்றை கைப்பிடியில் வைத்திருப்பேன் என்பதே தெளிவான நிலை.
நான் ஒரு கட்டத்தில் பி.எஸ்.என்.எல் வேலையை தெரிவுசெய்துகொண்டேன். அதை என் அன்றாடவாழ்க்கைக்கு மட்டுமென்று வகுத்துக்கொண்டேன். அதில் பெரிய இலக்குகளை, சவால்களை உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்குள் அறியப்படாதவனாகவே இருந்தேன்.
இலக்கியத்தில் முழுமையாக ஈடுபட அந்த வேலை எனக்கு பேருதவியாக அமைந்ததை இப்போது புரிந்துகொள்கிறேன். அன்று அவ்வேலை கிடைக்காமல் நான் அன்றாடப்பொழுதுக்கே அல்லற்பட்டிருந்தால் இத்தனை படித்திருக்கமாட்டேன், ‘எழுதியிருக்கமாட்டேன். மேலும் சில ஆண்டுகளுக்குப்பின் எனக்கு இலக்கியமல்ல களம் என்று கண்டுகொண்டிருந்தாலும் அதை நோக்கித் திரும்பியிருக்கமுடியும்.
ஆகவே ‘தேவனுக்குரியதை தேவனுக்கும் சீசருக்குரியதை சீசருக்கும்’ அளிக்கவேண்டும் என்ற மனிதகுமாரரின் வரியையே மீண்டும் சுட்டிக்காட்டுவேன். உலகியலில் தெளிவான ஒரு சிறிய இலக்கு கொண்டிருங்கள். பதற்றமில்லாமல் வைத்திருக்கும், நிலையான ஊதியம் தரும் வேலை. அதற்கு குருதியில் ஒரு பகுதியை கொடுப்பதில் பிழையே இல்லை. அது ஒரு சுயபலிதான். எல்லா தெய்வங்களும் தலை கேட்பவைதான்.
அதையே உலகியலில் சூழ்ந்திருக்கும் பிறருக்குக் காட்டலாம். நான் வேறுமாதிரி என அவர்களிடம் ஒருபோதும் சொல்லலாகாது. சொல்லிப் புரியவைக்க முடியாது. அவர்களின் உலகம் வேறு. அவர்களுடன் மோதினால் நம் ஆற்றல் வீணாகும். அவர்களுக்கு அவர்கள் கோரும் முகம் ஒன்றை அளித்துவிட்டால் நம் உலகில் நாம் விடுதலை கொள்கிறோம். அவர்களைப்போலத்தான் நாமும் என அவர்கள் நம்பட்டும். நாம் நம் கனவுகளைத் தொடர்வோம். வென்றபின் உலகறியட்டும்.
உங்கள் நிலையில் நான் இருந்திருந்தால்
அ. அந்தவேலையை என் களமாக எண்ணியிருக்கமாட்டேன். அதில் என் கனவுகளைத் தேடியிருக்கமாட்டேன். அதை ஒரு கப்பமாக, சுயபலியாக எண்ணுவேன். எல்லைக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வேன்.
ஆ.அதில் குறைந்தபட்ச கவனம், உழைப்பைச் செலுத்தி அதிகபட்ச நேரத்தை, தனிமையை ஈட்டிக்கொள்வேன்.
இ, இன்னொரு வேலை கிடைக்காமல் அந்த வேலையை விட்டிருக்கமாட்டேன்.
பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். உலகியலை கனவுகளுக்காக உதாசீனம் செய்தால் உலகியலுக்காக கனவுகளைக் கைவிடவேண்டியிருக்கும்.
ஜெ