முதுமொழிக் காஞ்சி 55

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை. 5

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.

பதவுரை:

இயைவது - தனக்குக் கூடுமான பொருளை,

கரத்தலின் - இரந்தவர்க்கு இல்லை யென்று ஒளித்தலைப் போல்,

கொடுமை - கொடுமையான செய்கை, இல்லை - வேறில்லை.

இரவுள்ள உள்ளம் உருகும், கரவுள்ள
உள்ளதூஉ மின்றிக் கெடும். 1069 இரவச்சம்

பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-18, 1:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே