மழலையோடு மழலையாய்

கூண்டுக் கிளிகளுக்கு விடுதலையாம்,
பறந்து சென்றன ஆச்சியின் ஊருக்கு !
கல்பவிருட்சமாம், கோவில் வேப்பமரத்தடியிலே
பேசிச் சிரித்து மகிழ்ந்த நாட்கள் !
கோலியையும் கேலியையும்
பாண்டியையும் பச்சைக்குதிரையையும்
பம்பரமாய்ச் சுற்றி விளையாடிய நாட்கள் !
காயா பழமாவும் கிச்சுக் கிச்சுத் தாம்புலமும்
பூப்பறித்தலும், ஒரு குடம் தண்ணீர் ஊற்றுதலும்
பசுமரத்தாணியாய்ப் பதிந்திருந்த நாட்கள் !
பொக்கைவாய்த் தாத்தனும் ஆத்தாளும்
பசியாற வாவென்று தடியெடுக்கும் வரையிலே
பல்லாங்குழியில் மூழ்கியிருந்த தருணங்கள் !
பல்லாண்டானாலும் தேடிச் சென்றாலும், இவையெல்லாம்
மீண்டும் கிடைக்காதோ இவ்வியந்திர வாழ்க்கையிலே
என்றெண்ணி எண்ணி வருந்திய தருணங்கள் !
மீண்டும் கொடுத்தான், எம் இறைவன்
மழலையோடு மழலையாய் மாறும் தருணத்தை
எங்கள் சமுதாய நற்பணி மன்றத்திலே
குடியரசு தின விழாவிலே !