சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம்

சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம்

01/06/2018அன்றுசாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் கவியரங்கம் – பாடலரங்கில்
வாசித்த கவிதை
இடம் : தமுஎகச கைலாசபுரம் கிளை, திருச்சி

சரித்திரத்தில் மூத்த குடி
சரித்திரங்கள் பல பூத்த குடி
சமத்துவமாய் வாழ்ந்த குடி
சாட்சியங்கள் பல உண்டு

குரங்கின் வழித்தோன்றல் மனிதன்
கூற்று இது உண்மை எனில்
குரங்கிலில்லாச் சாதி _ நம்
கூட்டத்திலே புகுந்ததெப்படி ?

ஆதியிலே சாதியில்லை
கீழடிதான் சாட்சி
பிறப்பில் உயர்ச்சி தாழ்ச்சி
பார்ப்பான் செய்த சூழ்ச்சி

பிழைக்க வந்த சிறு கூட்டம்செய்த
பிழைப்பு வாதச் சதியாலே
பிரிந்து பிரிந்து நாம் நின்றோம்
பிழைக்க வந்தவன் நம்மை வென்றான்

சாதியற்ற தமிழர் பெருக
காவியழிய வேண்டும்
காவியற்ற தமிழ்நாடு பேண
சாதி ஒழிய வேண்டும்

மதத்தை தூக்கிப் பிடிப்பதுதான்
காவியோட கொள்கை
மனுவைக் காத்து வைப்பதுதான்
மதத்தோட கொள்கை

வடக்கிலிருந்து வருகிறது
காவி என்னும் பூதம்
அடிமைகள் இரண்டு பேரை
ஆட்டி வைத்து ஓதுகிறது வேதம்

கொல்லைப் புற வழியில்
கோவா , மணிப்பூர் பிடித்து
நம் எல்லைவரை வந்து
எட்டிப் பார்க்குது காவி

காரணமே இல்லாமல்
காவியை வெறுக்கவில்லை
காரணங்களை நினைத்துப் பார்த்தால்
நெஞ்சம் பொறுக்கவில்லை

அயோத்தியும் கோத்ராவும்
அங்க அப்ப நடந்தது
ஆம்பூரும் , கோவையும்
இங்க இப்ப நடந்தது

வாக்காளர் பட்டியலை
கையில் வைத்துக் கொண்டுதான்
வெறிப் பிடித்த கூட்டம்
தேடிக் கொன்றது மறக்கல

அனிதா படுகொலையை
நாங்க இன்னும் மறக்கல
நந்தினி நரபலியை
நாங்க இன்னும் மறக்கல

ஆஷிபாவின் குருதி படிந்த
ஈரம் கூட காயல
கொட்டமடிக்கும் கூட்டத்தோட
கூச்சலும் தான் குறையல

புயல் சீற்றப் பாதிப்பைப்
புகைப்படத்தில் பார்த்தது
சிலை திறக்க மட்டும்
சீக்கிரமே வந்தது

எலி கவ்வி எங்க உழவர்
போராடும் போதும்
அம்மணமாய் நடுத்தெருவில்
அவன் ஓடும் போதும் ...

கண்டுக்காத காவி
ரத்தக்கறை படிந்த காவி
படைப்பாளியைச் சுட்டுக்கொன்ற
பார்ப்பனியக் காவி

கூவிக் கூவி அழைத்தாலும்
கேவிக் கேவி அழுதாலும்
இங்கு பரவாது காவி
இது பெரியாரின் பூமி

மதவாதக் கூச்சலுக்கு
மயங்காத கூட்டம்
மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரிந்த கூட்டம்

ஆதியிலே சாதியில்லை
கீழடிதான் சாட்சி
சாதி பார்த்து நாம் பிரிந்தால்
காவி செய்யும் சூழ்ச்சி

சாதியில்லா தமிழரென
ஒன்று படுவோம்
காவியற்ற தமிழகத்தைக்
கட்டியமைப்போம்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (22-Jun-18, 10:54 am)
பார்வை : 603

மேலே