எனக்கென்று நல்ல நேரம்

எனக்கென்று நல்ல நேரம்

என் சுமையை இங்கு தூக்குக்
கயிறுகள் தாங்குவதில்லை.
விஷங்கள் சீரணமாவதால்
சாவதில் இன்னும் இடையூறு.
வலிகள் எந்த ஒத்தடத்தையும்
வகையறிவதில்லை ஏனோ!
ரோஜாக்கள் ஒற்றினாலும்
முட்கள் உணர்கிறேனே.
பனியில் தோய்த்த பஞ்சுகூடக்
கொப்பளம் தருகிறது எனக்கு.
அன்பினால் விழுந்த சொற்களும்
அனலாய்க் காய்த்துவிடுகின்றன.
சாமி வரமெனும் இன்பம்
சடுதியில் சாபமாய் வலிக்கும்.
அழகுச் சிலையை நோக்க
அதற்கு உடனே விரிசல் வரும்.
காதலிப்பேனோ என எண்ணிக்
காணும் கன்னிகளுக்குக் காயம்.
புண்படவும் புண்படுத்தவும்
வேண்டுமென்றே நான்
காத்திருக்கிறேன் என்பதே நிசமோ?
எனக்கென்று நானே சில
முகூர்த்தங்கள் செய்துகொள்ள
முனையாது விட்டேனோ?!

எழுதியவர் : (24-Jun-18, 2:24 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 146

மேலே