தவற விடப்பட்ட
நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள்
அந்த குழந்தைத்தனங்களை...
நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள்
குட்டி போடும் என்று
புத்தகத்தின் இடுக்கில்
சொருகப்பட்ட மயிலிறகினை.
புளியங்கொட்டையை தேய்த்து
சூடு போடும் அந்த விதையை.
"வெந்துருச்சா வேகலை" என்று
கையை தூக்கிப் பார்க்கும் அந்த விளையாட்டை.
பள்ளி இடைவேளையில் சுவைத்த
அந்த காசு மிட்டாயை.
"பழம்,கா" என்ற அந்த
விரல்களின் வடிவத்தை.
எல்லோரோடும் பகிர்ந்துக் கொண்ட
அந்த இலந்தை பழத்தை.
நண்பனின் தோள் மீது கை போட்டபடி
நடக்கும் அந்த நடையை.
நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள்
அந்த குழந்தைத்தனங்களை...