அவளின் மௌனக்கதறல்

முழுதாய் மலராத மென்மலரவள்..
வெள்ளத்துள் சிக்கி கசங்கிபோனாள்..
மகரந்தம் அறியாத அரும்பவள்..
வண்டுகளின் குடைச்சலால் வதங்கிப்போனாள்..
தொட்டிலை நீங்காத மழலையவள்..
கயவர்களின் கட்டிலில் கட்டப்பட்டாள்...
தாலாட்டு மறக்காதத் தளிரவள்..
துச்சாதனன் பலரால் துடித்துப்போனாள்..

பால்மணம் முழுதாய் மறைந்திடவில்லை..
பதின்பருவ மாற்றம் நிகழ்ந்திடவில்லை..
பிறப்பில் பெண்ணானது அவளின் தவறில்லை..
பிஞ்சுமகளின் கதறல் படைத்தவனையும் எட்டவில்லை...

அண்ணன் என்று சிரித்திருப்பாள்
அவன்கை இரண்டும் தீண்டாதவரை ...
அவனை சிற்றப்பனாய் நினைத்திருப்பாள்..
அவளின் சிற்றாடையை அவன்களையும்வரை...
பாட்டன் தந்த மிட்டாயென சுவைத்திருப்பாள்..
பாதியில் இவளிதழை அவன்சுவைக்காதவரை...
தன்நண்பனாய் நினைந்து தோள்சாய்ந்திருப்பாள்...
கட்டிலுக்கு அவளை அழைக்காதவரை..

தினச் செய்திகளில் ஒன்றாய்
நாளிதழ்களின் தலைப்புகளாய்
அரவமில்லாப் பாதையில் அலறல்களாய்..
பேருந்துப் பயண உரசல்களாய்
கண்டும் கேட்டும் உணர்ந்தும் மரத்துப்போனாள்..

பார்வையால் புசிக்கிறீர்கள்..
வார்த்தைகளால் வதைக்கிறீர்கள்..
தீண்டல்களால் திண்கிறீர்கள்..
எதைத் தேடுகிறீர்கள் அவளிடம்..

வடிவில்தான் வேறாய் இருக்கிறாள்..
தசையும் நரம்பும் வெவ்வேறில்லை..
வலியும் உணர்வும் வெவ்வேறில்லை..
சுவைத்துமகிழ அவள்போதைப் பொருளில்லை..

முப்பத்து மூவாயிரம் கோடி தேவர்களாம்..
முந்நூறு மதங்களாம் அதற்கும் கடவுள்களாம்...
முச்சந்திக்கு ஒரு தெய்வமாம்..
ஊருக்கு ஆறு கோவில்களாம்...
ஒருவர் கூட வருவதில்லை..

வேண்டாம் வர வேண்டாம்..
யாரறிவார் பூமி வந்தால்
காக்கும் கடவுள் கூட
கட்டிலிடச் சொல்லி வற்புறுத்தக் கூடும்...

பாடை ஏறி செல்லும்போதும்
ஆடை தாண்டி பார்க்கும் உலகம்
அடிப் பெண்ணே
கவலை கொள்ளாதே..
என்றாவதொரு நாள்
உணர்வும் உடம்பும் மரத்துப்போகும்
வலியும் வேதனையும்
மரித்துப்போகும்..
மண்ணில் நீ புதைந்தபின்பு
உன்மௌனக் கதறல் நின்றிடக்கூடும்..

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (15-Aug-18, 7:32 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 306

மேலே