என்றுவரும் அந்த ஒருநிமிடம்

ஆண்டுகள்
அழுதுகொண்டே செல்கிறது - அதன்
அர்த்தம் புரிகிறதா
உங்களுக்கு...!

வானவில்
வண்ணம் மாறிப் போனதே
அதுவேனும் தெரிகிறதா
கண்களுக்கு...!

கருப்பு மேகத்திடம்
கடன் வாங்கி - நான்
நெருப்புக் குளியல்
குளிக்கின்றேனே
கூர்ந்து கவனியுங்கள்...!

இப்பொழுதெல்லாம்...
சின்னஞ்சிறு குழந்தைகளின்
பொம்மையாக
சொல்லும் சொல்லுக்கெல்லாம்
தலையாட்டுகிறேன்...!

இரவும் பகலும்
எனக்கு இணையாகிப்போனது
கனவுகள் வருவதில்லை...!
காரணம் தூக்கமில்லை...

நிலவுக்கு வர்ணனை
நீயின்றி யாருமில்லை
கதிரவன் கற்புக்கு
நீதானே காவல் பெண்ணே...!

இயற்க்கை அழகெல்லாம்
உன்னிடத்தில் தஞ்சமடி
பேசும் கிளிக்கூட
உன்பேச்சைக்
கொஞ்சுமடி...!

உன் புருவத்தை வளைக்காதே
வானவில் ஒடிந்துவிடும்
என் பருவத்தை வதைக்காதே
பாவிமனம் பதறிவிடும்....

இதழ்களின் விரிசலிலே
என்னுருவம் புதைக்காதே
இமைக்குள்ளே நீ புகுந்து
என் கண்ணை உறுத்தாதே...!

தேவதைகள் தேவையென்று
பூமிக்கு விளம்பரமா
பூவுக்குள் உன்னாலே
எப்போதும் கலவரமா...!

என் காதலை
தினம் சொல்ல
தவிக்கிறேன் பெண்ணே...!

நிமிடங்கள் ஓடும்
வருடங்கள் ஓடும்
காற்றினில் இவ்வரிகள்
கரைந்தேனும் ஓடும்...!

காதலால்...
உன்கரம் பிடித்து
கவிதையில்
உன்னுடல் நனைத்து

உன்நெற்றியில் திலகமிட
நாணம் அவிழ்த்துவிட
தேரில் நானேறி
என்தேவதை கூடவர

என்றுவரும் பெண்ணே
அந்த ஒரு நிமிடம்...!

பூக்களின்
பொதுமொழியை
புரிந்து கொள்வேன்...

கவிஞன்
பாக்களில் உள்ளக்கரு
உணர்ந்து கொள்வேன்...!

நான்
ஏற்றிய காதலுக்கு
உன் குரலை
தேசிய கீதமாய்
தெரிவு செய்வேன்...

என்று வரும்
அந்த ஒருநிமிடம்...

எனது கைபேசி எடுத்த
உன் புகைப்படம் தானடி
உலக அதிசயத்தில்
ஒன்றாகிப் போனது...!

தெருவில்
உன் தடங்கண்டு
இது தேவதை உலகமென்பேன்

மதுரை மல்லிக்கு
நீதானே
மகளென்பேன்...!

உன்னுள்ளம்
மலர்ப்பூத்து
அதில் காதல் உருவெடுத்தால்

என் எண்ணம்
ஈடேறும் கண்ணே...!

என்று வரும்
அந்த ஒரு நிமிடம்...

நீர் துளிகளாய்
நான் பிறந்து
உன்னுடல் மீது உருண்டோட...

கனிகளாய்
நான்பிறந்து
உன்னிதழ் மீது இச்சைகொள்ள

என்றுவரும்
அந்த ஒரு நிமிடம்...

காத்திருப்பேனடி
உன் கைவிரல் சேர
மறந்தாலும்...!

நான்
கல்லறை செல்லையிலே
உன் கண்ணீர்
துளிகண்டால்...

அந்தநொடி போதும்
நான்
வெந்துபோனாலும்
மீண்டும்
வந்து நிற்ப்பேன்
உன்முன்னால்...!

மீண்டும்
வந்துநிற்ப்பேன்
உன் கண்முன்னால்.

எழுதியவர் : முப்படை முருகன் (22-Aug-18, 1:49 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 130

மேலே