நான் கொண்டாட முடியாத மழை
நான் கொண்டாட முடியாத மழை
கருமேகத்தை கண்டால்
கலங்கும் என் இதயம்
ஊர் போற்றி வரவேற்கும்
என் உள்ளம் கனத்துப்போகும்
சிறு தூரல்
கையில் பட்டு சிரித்ததுண்டு
பெரு தூரல்
கையில் பட்டு அழுததுண்டு
ஆசை அளவு கடந்தது
அதன் மேல்
ஆனால் அனுபவிக்க
மனம் வராது
அனுபவித்து இருக்கிறேன்
பல கனவுகளில்
மழையே வேண்டாம்
என்று வேண்டியது
ஒருகாலம் புரிதலுக்கு பிறகு
வயல் கண்மாய்க்கு மட்டும்
பெய்து விடு
எங்களுக்கு வேண்டாம்
என வேண்டியது ஒரு காலம்
எனக்கும் மழைக்கும்
பகையேதுமில்லை
ஓலக்குடிசையில் தாயுடன்
நனைந்த சேலையில்
நடுக்கத்தோடே உறங்குவது
ஒருவித சுகம்தான்
ஆனால் அப்பா மலேரியாவிலும்
காலராவிலும் படுத்தால்
வயிறு காயுமே இந்த மழையால்
கொஞ்சம் துளி பெரிதானாலும்
கூரையை கிழித்துக்கொண்டு
என் விழியை வந்தடையும்
அந்த இரவின் நடுக்கத்தில்
ஓர் குளியல் அவசியமா
கட்டிய அடுப்பை கரைத்து
விறகை நீர் சூழ்ந்து
பாத்திரங்கள் கப்பலாகும்
முழங்கால் நீரோடும்
சேரோடும் கலந்திடும்
குளிருக்கு காணாத
தீயொன்று வயிற்றில்
எரிந்திடும் இந்த மழையால்
எதுவும் நிரந்தரம் அல்ல
என்றோ ஓர்நாள்
என் ஆசைப்படி மழையில்
நனயத்தான் போகிறேன்
என்ற எண்ணத்தில்
காலம் ஓடியது
வாழ்வு மாறியது
கூரை தகர்ந்து செங்கல் ஆனது
இன்னும் சொல்லப்போனால்
படிகள் கட்டி மாடியும் வந்தது
மிகுந்த ஆவலுடன் காத்திருக்க
மாரி வந்தான் பலத்த சத்தத்துடன்
அடக்கி வைத்த ஆசைகள்
அனைத்தையும் வெளிப்படுத்த
மாடிக்கு சென்று வரவேற்றேன்
மேகம் வடித்த கண்ணீரைவிட
நான் சிந்திய கண்ணீர் அதிகம்
அது மழையை கண்டு அல்ல
எனக்கு எதிரே உள்ள
ஓலக்குடிசைகளை கண்டு
அவன் வேதனையுறும் போது
நான் மட்டும் எப்படி
கொண்டாட முடியும்
மாறும்வரை மழை
கொண்டாட முடியாவொன்று
என் வாழ்வில்...
எழுத்து சே.இனியன்