இதுதானா வாழ்க்கை

#இதுதானா வாழ்க்கை..#சொ.சாந்தி
ஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்து
ஓய்வும் மறந்து உறவைப் பிரிந்து
சேர்த்த செல்வம் குன்றென உயர்ந்து
நின்ற வாழ்வில் இன்பம்இல்லை ..!
ஆசை மனைவி அருமை பிள்ளை
கூடிக் களிக்க நேரம் இன்றி - பொருள்
ஈட்டல் ஒன்றே குறிக்கோளெனவே
நின்ற வாழ்வில் ஒதுங்கும் உறவும்..!.
ருசித்து எவையும் உண்டதுமில்லை
ரசித்து எதையும் கண்டதுமில்லை
நின்றால் கணக்கு நடந்தால் கணக்கென
இருப்போர் வாழ்வும் சுவைப்பதுமில்லை..!
தேடிய செல்வம் கேலி செய்யும்
நாடிநரம்பினில் நோயாடும் பொழுதினில்
உணவும் இருக்க காலமுமிருக்க - வரும்
ருசிக்கவியலா கொடும் பல பிணிகள்..!
குன்றிய உடலில் ஒன்றிய பிணியால்
கரையும் பொருளும் மருத்துவ செலவால்
அறிந்தேயுணர பிறவியும் முடியும்
வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையல்ல..!
உள்ளது கொண்டு இனிய வாழ்க்கை
உறவொடு களிக்க காலம் ஒதுக்கி
செலவிடும் நேரம் இன்பம் கோடி
சேர்ந்திடும் அவரை சொர்க்கமும் நாடி..!
#சொ.சாந்தி