காதலி என் காதலி---பாடல்---

மீள்பதிவு... (2013இல் எழுதியது. சில திருத்தங்களுடன் புதிய இரண்டாம் சரணத்துடன்.)

உலகம் எப்படி பட்டது என்று சரிவர அறியாத ஒரு ஆணுக்கும் ஒரு புத்திசாலியானப் பெண்ணுக்கும் காதல் பூத்து வளர்கிறது. இது பெண் வீட்டுக்குத் தெரிந்து இவள் சம்மதமின்றி பாசத்தால் மிரட்டி ஒத்துக் கொள்ளச் செய்து திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை அறியாது அவன் இவள் எனைவிட்டுச் சென்றாளோ?... என்று பெண்ணின் வீட்டை நோக்கிப் பாடிச் செல்லுதல். கடைசியில் அவளும் பதில் செல்லுதல். இது தான் சூழல்...


பல்லவி :

காதலி என் காதலி
எனைக் காத்த முள்வேலி... (2)
எங்குச் சென்றாய் எனை விட்டு - நீ
எங்குச் சென்றாய் எனை விட்டு...
எனைக் காத்த முட்கள் உதிர்ந்ததோ?... - இல்லை
பூவாக வேறு எங்கோ?... மலர்ந்ததோ?...

காதலி என் காதலி...


சரணம் 1 :

வானையும் தூது விட்டேன்
காற்றையும் தூது விட்டேன்
உனைக் காணுமென்று அறியவே
கண்களின் இமை மூடி விட்டேன்... (2)
காதலி என் காதலி (2)

கண்கள் இரண்டால்
எந்தன் நெஞ்சைப் பிழிந்தாய்...
உன் பெயர் சொல்லி
என்னைப் புலம்ப வைத்தாய்...

ஒரு கால் கொண்ட ரோஜா
உன் கூந்தலில் ஆட்டம்...
இரு கால் கொண்ட ரோஜா
என் காதலில் ஆட்டம்... (2)

காதலி என் காதலி...


சரணம் 2 :

வாசலில் தேடி வந்தேன்
வார்த்தையில் வாடி நின்றேன்
உனை இல்லையென்று சொல்லியே
நெஞ்சினில் சுமை ஏற்றி வைத்தார்... (2)
காதலி என் காதலி (2)

உன்னை இழந்தால்
இந்த உடம்பை எரிப்பார்...
உன் முகம் கண்டால்
செல்லும் உயிரைத் தடுப்பேன்...

கொடி போல் பட்டுப் போகும்
ஒரு காதலைக் கண்டேன்...
வெடி போல் நெஞ்சம் சிதறும்
அதன் வேதனைக் கொண்டேன்... (2)

காதலா என் காதலா
எனைத் தேடும் கண்ணாளா...
எங்குச் செல்வேன் உனை விட்டு - நான்
எங்குச் செல்வேன் உனை விட்டு...
உனைப் பார்க்கும் ஆசை துடிக்குதே - நெஞ்சம்
வேராகிப் பூவாய் உன்னைச் சுமக்குதே...

காதலா என் காதலா...
காதலி என் காதலி...

எழுதியவர் : இதயம் விஜய் (12-Oct-18, 8:55 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 852

மேலே