பெருந்துறை திருப்பெருந்துறை - ஆவுடையார் கோயில்-----------சிவபெருமான் புகழ் பாடும் பாமாலைகள், பதிகங்கள், மரபுக் கவிதை - by - வி சுப்பிரமணியன்

(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம்" என்ற அரையடி வாய்பாடு);
(கலிவிருத்த அமைப்பில் 4 விளச்சீர்கள் அமைந்த தேவார உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்")

1)
அணிமயில் அனஉமை இடம்அமர் பதியினை
.. அலைநதி கலைமதி மலரொடு தலைமிசை
அணிகிற ஒருவனை அடியிணை பணிகிற
.. அடியவர் மடிகிற தினம்என உயிர்கொள
நணுகிய நமன்தனை உதைத்தருள் இறைவனை
.. நடுங்கிய சுரர்தொழ விடத்தினை மிடற்றடை
மணியினைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.

அன - அன்ன - போன்ற;

ஒருவன் - ஒப்பற்றவன்;

நணுகுதல் - சமீபித்தல்; நெருங்குதல்;

நடுங்குதல் - அஞ்சுதல்;

சுரர் - தேவர்கள்;

மருந்து - அமுதம்;

அணி மயில் அன உமை இடம் அமர் பதியினை - அழகிய மயில் போன்ற உமையம்மையை ஒரு கூறாக உடைய தலைவனை;

அலைநதி கலைமதி மலரொடு தலைமிசை அணிகிற ஒருவனை - அலையுடைய கங்கையையும் ஒற்றைக்கலை உடைய பிறைச்சந்திரனையும் பூக்களோடு தன் தலைமேல் சூடும் ஒப்பற்றவனை;

அடியிணை பணிகிற அடியவர் மடிகிற தினம் என உயிர்கொள நணுகிய நமன்தனை உதைத்தருள் இறைவனை - ஈசனின் இரு திருவடிகளை வணங்கும் மார்க்கண்டேயரின் ஆயுள் முடிகிற நாள் என்று எண்ணி அவரைக் கொல்வதற்காக நெருங்கிய காலனை உதைத்த கடவுளை;

நடுங்கிய சுரர் தொழ விடத்தினை மிடற்று அடை மணியினைப் - அஞ்சிய தேவர்கள் அடிதொழவும், நஞ்சைக் கண்டத்தில் அடைத்த மாணிக்கத்தை;

பெருந்துறைக் குருந்து அடி இருந்து அருள் மருந்தினைப் பொருந்திடில் அரும் துணை ஆவனே - திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.

எழுதியவர் : (30-Oct-18, 8:59 pm)
பார்வை : 95

மேலே