யாரையும் ஏசாது அமைதல் இனியவணி – அணியறுபது 52
நேரிசை வெண்பா
பேசாத மோனம் பெரியவணி; யாரையும்
ஏசா(து) அமைதல் இனியவணி; - மாசேதும்
உள்ளம் உறாமை உயிரணி; யாருக்கும்
கள்ளம் உறாமை அணி. 52
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
மவுனம் மனிதனுக்கு அதிசய அழகு; எவரையும் இகழ்ந்து பேசாமல் இருப்பது வாய்க்கு உயர்ந்த அழகு; உள்ளத்தில் மாசு யாதும் மருவாமல் பாதுகாப்பது உயிர்க்கு இனிய அழகு; கள்ளம் இல்லாமை எல்லார்க்கும் நல்ல அழகு ஆகும்.
சொல்லும் செயலும் மனித வாழ்வில் இயல்பாய் இயங்கி வருகின்றன. உலக நிலையில் பலன்கள் விளைந்து வர இவை கிளர்ந்துவரின் நலமாய்ச் சிறந்து வருகின்றன. பயன் இல்லையேல் வீண்சொல், விண் செயல் என வெறுத்து இகழப் படுகின்றன.
மோனம் என்பது ஞான வரம்பு. - ஒளவையார். ஆன்மானந்தத்தை அடைய நேர்ந்த ஞானிகளிடம் பேச்சும் செயலும் ஒடுங்கி விடுகின்றன. ஞானத்துக்கும் மோனத்துக்கும் உள்ள உறவுரிமைகளை இதனால் உணர்ந்து கொள்கிறோம்.
பேச நேர்ந்தால் பிழை ஏதும் நேராமல் பேசி வருவது நலம். பிறரை இகழ்ந்து பேச நேர்ந்தவன் தனக்கு உள்ளேயே எள்ளி இகழப்படுகிறான்.
ஒருவன் இசை பெற்று வர வேண்டுமானால் எவரையும் யாதும் அவன் வசை கூறலாகாது. வார்த்தை நலமாய் வரின் மனிதன் நல்லவனாய் உயர்கிறான்; நல்ல சொல் நலம்பல தருதலால் அவ்வுரை உயிர்க்கு உயரமிர்தம் ஆகிறது.
தன் மனத்தை மாசு படியாமல் எவன் பாதுகாத்து வருகிறானோ, அவன் ஈசன் அருளை எளிதே அடைந்து கொள்கிறான். உள்ளம் தூய்மை தோய்ந்து வர உயிர் பேரின்ப வெள்ளம் தோய்ந்து வருகிறது.
மனமும் வாக்கும் காயமும் மாசுறாமல் பேணிவரின் அரிய மகிமைகள் காண வருகின்றன. உயர்ந்த குலமகனுக்குச் சிறந்த அடையாளம் எவரையும் இகழ்ந்து பேசாமையே. பிறரை இகழ்பவன் இழிமகனாய் அழிவுறுகின்றான். மானம் மரியாதைகள் இன்றித் துடுக்காய்ப் பேசுபவர் ஈன மக்களாய் இழிவே அடைகின்றனர்.
ஞானத்தின் நிலையமாயுள்ள அதன் தானத்தையும் தலைமையையும் கருதி மோனத்தை முதலில் குறித்தது. ஆன்ம ஞானம் தோய்ந்துவர நேரின் அமைதி அங்கே மேன்மையாய் வாய்ந்து வருகிறது.
தேனைக் காணும் வரையும் வண்டு ஓலமிட்டு உலாவி அலைகிறது. கண்டால் ஒலி யாவும் அடங்கி அதனை உண்டு களித்துத் திளைத்துக் கிடக்கிறது. உலக வாழ்க்கை பேச்சு வழக்கால் நடந்து வருகிறது; பரவாழ்க்கை பேசாத மோன நிலையில் பிறந்துளது.
அமுத மயமான ஆன்மாவை அறிய நேராதவர் அவல வாழ்வில் பலப்பல பேசி ஆரவாரமாய்ப் பிதற்றித் திரிகின்றனர். அறிய நேர்ந்தவர் பொறி புலன்கள் யாவும் அடங்கி நெறி நியமங்களுடன் அமைதியாய் ஆன்மானந்தத்தை அனுபவிக்கின்றனர்.
உள்ளம் உரைசெயல்
உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை
உள்ளில் ஒடுங்கே. - திருவாய்மொழி
நினைவு, சொல், செயல்கள் எல்லாம் அடங்கி மோனமாய்ப் பகவானிடம் ஒடுங்கி நம்மாழ்வார் பரமானந்தத்தை அனுபவித்துள்ளார். அந்த உண்மையை உலகம் அறிய இவ்வாறு உணர்த்தி யுள்ளார்.
ஞான யோகிகளின் மேன்மையான பான்மையாய் மோனம் அமைந்துள்ளமையால் அதன் அதிசய மகிமைகளை ஈங்கு ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம்.
மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்;
மோனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்நிற்கும்;
மோனம்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்;
மோனம்கை வந்தைங் கருமமும் முன்னுமே. (திருமந்திரம் 16 11)
மோனத்தின் மகிமையையும் அதனால் விளையும் பேரின்ப நிலையையும் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார் மோனம் கைவரின் முத்தியும் கைகூடும் என்றது ஈண்டு உய்த்து உணர உரியது.
இந்த மோன நிலை எளிதில் அமையாது: அரிய ஞானமும் பெரிய யோகமும் உற்றவரிடமே உறவாய் வருகிறது. உரை சுருங்க உணர்வு பெருகுகிறது. பேசாத மோன நிலையே பேச அரிய மகிமையுடைய ஈசனை நேரே காண நேர்கிறது,
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதுாரமே
பேய்க்குணம் அறிந்திந்த நாய்க்கும்ஒரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்!
சொல்லாடா ஊமையைப்போல் சொல்இறந்து நீஆகின்
அல்லால் எனக்குமுத்தி யாமோ? பராபரமே!
கற்றாலும் கேட்டாலும் காயமழி யாதசித்தி
பெற்றாலும் இன்பம் உண்டோ? பேசாய் பராபரமே!
பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்அருளாம்
வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே!
பேசாத மோன நிலையால் பெறுகின்ற பேரின்பப் பேறுகளைக் குறித்துத் தாயுமானவர் ஈசனிடம் இவ்வாறு ஆர்வம் மீதூர்ந்து பரிந்து பேசியிருக்கிறார்.
ஆன்மாவை ஆழ்ந்து நோக்குவது மேன்மையான தியானமாம். பொறி புலன்களும் கரணங்களும் ஒடுங்கிய வழியே பரமானந்தம் உதயமாய் வருகிறது. ஆகவே பேசாத ஆனந்த நிட்டை என்று. அது பேர் பெற்றுச் சீருற்று நின்றது.
அவத்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி(து) இருக்கும் மவுனம். - திருவகுப்பு 5
அல்லல் பலவும் நீக்கி எல்லா நலன்களையும் மோனம் அருளும் என அருணகிரிநாதர் இங்ஙனம் அருளியுள்ளார். பேசா நிலையில் பேரின்பம் பெற்றவராதலால் மோனத்தை இவ்வாறு வியந்து குறித்திருக்கிறார். மோனம் ஞான யோகமாகிறது.
நேரிசை வெண்பா
மோனிகளைப் பார்த்திமையா மோகமும் வெண்திங்கள்
மேனி அழகெழுதா மேல்பத்தி - யான
பதுமா தனன்கண்ணும் பானுவும்போல் தானாய்
எதிராகும் சொப்பனத்தி லும். - ஒழிவிலொடுக்கம்
மவுனிகளை நோக்கி ஞானிகள் மகிழ்ந்து வருவதை இது புகழ்ந்துளது. மோனம் அதிசய மகிமைகளை அருளி வருதலால் இவ்வாறு அதனைப் பெரியோர்கள் துதி செய்துள்ளனர்.
Silence alone is great, all the rest is weakness. (A.Vigny)
பேசா மவுனமே பேருயர்வு மற்றவெல்லாம்
ஈசல் எளிமை இளிவு.
If thou desire to be wise, be so wise as to hold thy tongue. (Lavater)
அரியவுயர் ஞானியா ஆக விரும்பின்
உரியவுன் நாவை ஒடுக்கு.
இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. மவுன நிலையை எவரும் மதித்துப் போற்றித் துதித்து வருவதை இவற்றால் அறிந்து கொள்கிறோம்.