வயோதிகனின் இறுதி நாட்கள்

ஊருக்கு ஒதுக்கு புறமாக
ஒற்றை வீடு.
உறவென்று யாருமில்லா
ஒட்டுக்குடித்தன வாழ்க்கை.
ஒற்றை சூரியனும்
ஒற்றை சந்திரனும்
அழையா விருந்தாளி போல
அனுதினமும் ஓட்டை உடைசல் வழியாக
எட்டி பார்க்கின்றனர்..
ஒரு வயோதிகன்
ஒற்றை கயிற்று கட்டிலில்
உடல் சோர்ந்து
கூனி குறுகி குற்றுயிராய் கிடக்கிறான்.
பழைய கஞ்சியும் வெஞ்சனமும்
குவளை நிறைய தண்ணீரும்
சில கிளிஞ்சல் உடுமானமும்
ஆங்காங்கே சிதறி கிடக்கிறது ..
ஈயும் எறும்பும் பகலில் மொய்க்க
கொசுவும் மூட்டை பூச்சியும் இரவில் கடிக்க
மூத்திர வாடையும் புழுங்கல் வாடையும்
நாசியின் மேல் கப்பென்று ஏறி கிறங்கடிக்க
ஊசலாடும் உயிரின் மூச்சு
உறக்கமில்லாமல் நச்சரிக்க
மோட்டு வளையத்தை மேல்நோக்கி
விழிகள் நட்டுகிட்டு
நாடி நரம்புகள் தளர்ந்து
நாவு உலர நாதியற்று
உடலை பிரிந்து சென்றது
சொத்து பத்தில்லா உயிர்...

எழுதியவர் : சையது சேக் (31-Jan-19, 12:33 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 158

மேலே