காணவில்லை தொலைந்துவிட்டது
காணவில்லை தொலைந்துவிட்டது!
---------------------------------------------
காலை யில் எழுந்து சாவியைத்தேடினேன்
கதவைத் திறக்க,எங்கோ தொலைந்துவிட்டது!
காணவில்லை! பலமுறை தேடியபின்
கட்டில் கீழே ஆனந்த சயனம் கொண்டிருந்ததை
கடுப்புடன் எடுத்து அக்கணமே மேலும்
காத்திருக்காமல் சிங்கார சட்டமிட்டு
காட்சியாகமாட்ட முடிவெடுத்துமறு
காலை வரும்முன் அமுலாக்கி அகமகிழ்தேன்!
ஆருயிர்த் தோழிக்கு மடலெழுத
அன்புடனே முடிவெடுத்து,
அழகிய காகிதமெடுத்து,
அடுத்ததாக பேனா எங்கே என்று
அயராமல் தேடியும் எங்குமே
அகப்படவில்லை என் பார்வைக்கு!
ஆகா இனி இந்தத் தொல்லை
அணுவளவும் எனக்கு வேண்டாம் என
அக்கணமே முடிவெடுத்து
அழகிய பேழை ஒன்று வாங்கி
அடுக்கி வைத்தேன் பேனாக்களை மேசைமேல்!
அன்புடையீர்! இனி எனக்கில்லை
அல்லலுடன் பேனாதேடும் பெரும்பாடு!
சமையல் வாயு தீர்ந்துவிடுமென
சமயோசிதமாக முன்பதிவு செய்ய
சரியா தொலைபேசி எண்? என்று
சரி பார்க்கத் தேடி நின்றேன்
சாம்பல் நிற நாட்குறிப்பேட்டை!
சரியானத் தொல்லைதான்
சமயத்தில் கிடைக்கவில்லை! இந்த
சங்கடம் இனி வேண்டாம்- என
சடுதியில், தொலைபேசி அருகில்
சாயங்காலமே எண்கள் பதிவு செய்ய
சிங்காரமாய் ஒரு பதிப்பேடு கொலுவேற்றது காண்!!
சத்தியமாய் இனி எனக்கில்லை எண்தேடும் அவலம்!
இப்படி எத்தனை எத்தனை
இகவாழ்வில் தொலைத்துவிட்டு
இன்னல்கள் பலபட்டு-பின்பு
இன்பமாய் வாழ வழி பலதேடுகின்றோம்!
இனிய நண்பர்களே! உண்மையைக் கூறுங்கள்
இதுதானா நாம் தொலைத்தது?
இவ்வுலகில் நாம் தொலைத்த மனிதநேயம்
இன்னும் கிடைக்கவில்லையே !! என் செய்வோம்?
இனி ஒரு விதி செய்வோம்! மற்றவற்றைத்தொலைத்தாலும்
ஈடில்லா ''மனித நேயத்தைத்'' தொலைக்க வேண்டாம்!
இன்றே தேடிப்பிடிப்போம்,
இக வாழ்வு இன்பமுற கடைப்பிடிப்போம்!!
சாந்தா வெங்கட்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
