மென்மையானவள் - தொடர்ச்சி 1

ஊரில் திருவிழா என்பதால் மகேஷின் அம்மா, அப்பா, தங்கை எல்லாரும் கிராமத்திற்கு வந்தார்கள்.

கிராமத்திற்கு வந்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
மகேஷின் கடின உழைப்பை அவன் ஒரு வருடத்தில் ஏற்படுத்தி இருந்த மாற்றம் கண்கூடாகக் காட்டியது.

அன்றிரவு சாப்பிட அமர்ந்த மகேஷின் அப்பா, " பரவாயில்லை. என் மகன் மகேஷ் நல்ல உழைப்பாளி என்பதை காட்டி இருக்கிறான்.
இங்கு முன்பே அனுப்பாமல் காலம் தாழ்த்தி விட்டேனே!. அவனது இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன அம்மா? ",என்றார் தன் தாய் பாப்பம்மாவிடம்.

" மாற்றமெல்லாம் ஒன்றுமில்லை பா. உனக்கு பிடித்த வழியில் நீ படித்து முன்னேறினாய்.
அவன் அவனுக்கு பிடித்த வழியில் உழைத்து முன்னேறுகிறான். ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட மகேஷின் அம்மா, " இனி அவனுக்கோரு கல்யாணத்தைச் செய்து வைத்துவிட்டால் என்ன? ",என்றாங்க.

" அதற்கான நேரம் வரும். அவனே கேட்பான். ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.
இவ்வாறாக வீட்டினுள் கதை கதைத்துக் கொண்டிக்க மகேஷோ கொல்லைப் புறத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்து தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.

வேலை முடித்து மகேஷ் வீட்டினுள் வந்ததும் எல்லாரும் அமைதியாகி விட்டார்கள்.
மகேஷ் பட்டினத்தில் இருந்தவரை கோபக்காரனாக இருந்தான்.
அதனால் அவன் பெற்றோர் கூட அவன் முன் பேச பயப்படுவார்கள்.
அவன் தங்கை கோமதியும் தான்.

மகேஷ் வந்து அமர்ந்தான்.
பாட்டியிடம் உணவு கேட்டான்.
பரிமாறப்பட்டது.
சாப்பிட்டுவிட்டு தன் படுக்கையில் வந்து படுத்தான்.

அன்றிரவு மௌனமாகக் கரைந்தது.

காலையில் சேவல் கூவும் முன் எழுந்த மகேஷ், தன் அன்றாட கடமைகளை முடித்துவிட்டு அன்று செவ்வாய் கிழமை என்பதால் சந்தைக்குச் சென்றான்.

சந்தையில் தன் குடும்பம் திருவிழாவில் அணிய அப்பாவுக்கு வேஷ்டி சட்டை தூண்டு,
அம்மாவுக்கு பட்டுப்புடவை, தங்கைக்கு பட்டுப்பாவடை தாவணி, பாட்டிக்கு பிடித்த நூல் புடவை என்று எல்லாம் வாங்கிக் கொண்டான்.
அப்படியே வரும் போது முத்துவுக்கு ஒரு தங்க கழுத்தணி வாங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்தான்.
மணி 9 ஆகி இருந்தது.

அப்பாவிடம் வெள்ளை வேஷ்டி சட்டையை கொடுத்தான்.
அம்மாவிடம் பட்டுப்புடவையைக் கொடுத்தான்.
தங்கையிடம் பட்டு பாவடை தாவணியைக் கொடுத்தான்.
பாட்டியிடம் நூல் புடவையைக் கொடுத்தான்.

எல்லாத்தையும் கவனித்த பாட்டி, " ஏன்டா மகேஷ்! எல்லாருக்கும் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்க.
உனக்கு புது துணி எடுக்கலையா? ", என்றாங்க.

மகேஷ் பேசாமல் சென்று அமர்ந்தான்.

உள்ள சென்ற மகேஷின் அப்பா மகேஷிற்கு தான் வாங்கி வந்த புது ஆடையை எடுத்து வந்து கொடுத்தார்.

எல்லாரும் திருவிழாவிற்குச் செல்லத் தயாரானார்கள்.

அப்போது முத்து வந்தாள்.
சேலையில் மிக அழகாக இருந்தாள்.

மகேஷின் அப்பா, அம்மாவை முன்பே தெரியும் என்பதால் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்ல வந்தாள்.

முத்துவைக் கண்டதும் கோமதி தான் உடுத்தி இருந்த பட்டு பாவடை தாவணிகளைக் காட்டி", ஹேய் முத்து! எப்படி இருக்கு! என் அண்ணன் வாங்கி எனக்கு வாங்கிக் கொடுத்தது! ",என்று கூறி மகிழ்ந்தாள்.

" ம்ம். சூப்பரா இருக்கு! ",என்றாள் முத்து. அதைக் கண்டு புன்னகைத்தான் மகேஷ்.

மகேஷின் அப்பா, அம்மா வர அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினாள் முத்து.
இன்முகத்தோடு வாழ்த்தினார்கள்.
முத்து தங்களிடம் எப்போது ஆசிர்வாதம் வாங்கினாலும் எதாவது பரிசாக கொடுப்பார்கள்.
இப்போது எதைக் கொடுப்பது என்று அவர்கள் சற்று யோசிக்கும் போது மகேஷ் தான் வாங்கி வந்த கழுத்தணியை தன் பெற்றோரிடம் கொடுத்தான்.
அவர்களும் அதை முத்துவுக்கு பரிசாக அளித்தார்கள்.

பாப்பம்மா பாட்டிக்கு விடயம் புரிந்தது.
மகேஷிற்கும், முத்துவிற்கும் திருமணம் செய்தாற் போல கற்பனை செய்து பார்த்தாங்க.

கோயில் பூஜைக்கு நேரமாகிவிட்டதால் எல்லாரும் கோயிலுக்குக் கிளம்பினார்கள்.
வழியில் பலவேசமும் வந்து கலந்து அவர்களோடு கொண்டார்.

எல்லாரும் சந்தோஷமாக மூலமுதற்சிவனை வணங்கினார்கள்.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

மறுநாள் காலை மகேஷின் அப்பா, அம்மா, தங்கை எல்லாரும் பட்டிணத்திற்கு புறப்பட்டார்கள்.
மகேஷிற்கு அவர்களைப் பிரிந்து இருக்க மனமில்லை.
அவர்கள் மனதிலும் அதே நிலை தான்.
இருந்தாலும் மகேஷ் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
அவர்களும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

மகேஷின் முகம் வாடியிருந்தது.

வயல் வேலைகளில் இறங்கினான்.
முத்து அவனைக் காண வந்தாள்.
அன்று அவன் முகம் வாடி இருப்பதைக் கண்டுக் கொண்டாள்.

அதை மகேஷிடமே கேட்டுவிட்டாள், " ஏங்க! உங்க முகம் ஏன் இன்று வாடியிருக்கிறது? ",என்று.

" அதெல்லாம் ஒன்னுமில்ல பா. ",என்றான் மகேஷ்.

" சரி. என்னிடம் சொல்லக் கூடாது என்று நினைக்கிறீங்க போல? என்ன இருந்தாலும் நான் மூன்றாம் மனுஷி தானே! ",என்று வருத்தமுற்றாள் முத்து.


" அப்படி நினைக்கல. அப்பா, அம்மா, தங்கை எல்லாரையும் பக்கத்துல வைத்து பார்த்துக்க முடியலங்கற வருத்தம் தான் பா. ",என்றான் மகேஷ்.

" ஓ! அதான் முக வாட்டத்திற்கு காரணமா? ",என்றாள் முத்து.

" ஆமாம். ",என்றவாறு சற்று புன்னகைக்க முயற்சித்தான் மகேஷ்.

" அப்பா, அம்மா, தங்கை மேல இவ்வளவு பாசம் வச்சு இருக்கீங்க. அப்புறம் ஏன் அவங்களை இங்கே இருக்கச் சொல்லவில்லை. ",என்றாள் முத்து.

" எனக்கு இந்த வாழ்க்கை முறை பிடித்திருக்கிறது.
அவர்களுக்கு பட்டிணத்து வாழ்க்கை முறை பிடித்ததால் தான் பாட்டியைத் தனியா விட்டுட்டு அங்க போய் வாழுறாங்க.
இப்போ நான் இங்க இருக்க சொன்னால் மட்டும் இருந்திடவா போகிறார்கள்?. ",என்றான் மகேஷ் சற்று விரக்தியாக.

( தொடரும்... )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Mar-19, 5:46 am)
பார்வை : 417

மேலே