அன்பென்ற ஆலயம்---பாடல்---

சொந்த மெட்டில்...

பல்லவி :

சின்ன சின்னக் குயில்களே
எங்கள் வீட்டை வந்து பாருங்கள்...
வண்ண வண்ணக் கிளிகளே
உங்கள் கூட்டை விட்டு வாருங்கள்...

அன்பென்ற மழைத்தூவும் ஆனந்தம் விளையாடும்
இந்த வீட்டுக்குள்ளே...
பந்தங்கள் குழலாகும் பாசங்கள் இசையாகும்
சிந்தும் பாட்டுக்குள்ளே...

அன்புச் சொந்தங்கள் ஆயிரம் வாழ்கின்ற ஆலயம்
பூமியின் சொர்க்கமே - இது
பூமியின் சொர்க்கமே...

சின்ன சின்னக்


சரணம் 1 :

தாத்தாவின் வேர்வையில் நின்றாடும் பூச்செடி
பூக்கள் பூக்கும்... புது வாசம் தந்து...
பாட்டியின் வார்த்தையில் சந்தோசம் தந்திடும்
கதைகள் தோன்றும்... அதில் நீதி உண்டு...

பட்டாம் பூச்சிக் கூட்டம் போல்
விளையாடும் செல்லக் குழந்தைகள்...
கண்ணா மூச்சி ஆட்டத்தில்
அலைபாயும் சின்ன இதயங்கள்...

சில்லென்ற காலையில் வாசலில் தீட்டிய ஓவியம்
சித்தியின் கோலங்கள்...
ஒன்றாக வாழ்ந்திடும் உறவுகள் ஆக்கிய காவியம்
வானவில் காலங்கள்...

ஒளி தீபங்கள் ஏற்றிடும் வேளையில்
இங்கு வாழ்ந்திட வரம் கேட்கும் தெய்வங்கள்... (இங்கு வாழ்ந்திட...)

சின்ன சின்னக்...


சரணம் 2 :

அப்பாவின் மீசையும் அம்மாவின் பார்வையில்
அடங்கிப் போகும்... ஒரு மாயம் உண்டு...
அக்காவும் தம்பியும் செய்கின்ற சண்டையில்
மறைந்து வாழும்... ஒரு பாசம் உண்டு...

அத்தை செய்யும் சமையலில்
தரையிறங்கும் அந்த மேகங்கள்...
அண்ணி வந்து பரிமாற
இசை பாடும் கையின் வளையல்கள்...

கண்ணென்ற தாமரை நீரினில் நின்றிடும் காரணம்
தங்கையின் காயங்கள்...
சொந்தங்கள் யாவரும் அன்பினைத் தந்திடும் தோரணம்
ஆற்றிடும் காயங்கள்...

பல தெய்வங்கள் வாழ்ந்திடும் வீட்டினில்
வந்து தங்கிட இடம் கேட்கும் இயற்கைகள்... (வந்து தங்கிட...)

சின்ன சின்னக்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 4:48 pm)
பார்வை : 1137

மேலே