நான் காணாமல் போகின்றேன்
நான் காணாமல் போகின்றேன்
அம்மா!
செவிதனில் சேமித்துக்கொள்
என் குரல் எட்டும் வரை
எதிரொலித்து அடங்கட்டும்
என் நினைவுகள் உனை முட்டும் வரை….…..
தேக்காதே அதிகமாய்
கண்களில் கண்ணீரை….
வழியவிடு வற்றட்டும்
என்னோடு… ஓயட்டும்
வட்டிலிட்டு வாடாதே
பசியாற நானில்லை
புசிக்காது வாட்டத்தில்
என்பால் ஏங்காதே….
நீ இட்ட பருக்கை எல்லாம்
என் ஊணில் உயிர் ஊற்ற
நானே நீ என்று
கழித்திடுவாய் வருங்காலம்….
உன் மகளா மகனா நான்
இனம் புரியா வினா ஒன்று
சல்லடையாக்கி சந்தியிலே
இதயத்தை நிற்க வைக்க…
உணர்வுகளின் பிடியில் சிக்கி
மெல்லக் கரையும் நான்
உறவுகளின் பார்வைதனில்
சிறைபட்டு சிதைபடும் முன்
காணாமல் போகின்றேன்
கண்டோர் சொல்ல வேண்டாம்….
சு.உமாதேவி