பாரீசுக்குப் போயிருந்தேன்

பாரீசுக்குப் போயிருந்தேன்
பார்ப்பவரை பரவசத்திலாழ்த்தும்
பல பல படிமங்கள்
பார்வைக்கு விருந்தாகின

பஞ்ச வர்ணக் கிளியொன்று
பட்டுப்புழுபோல் நெளிந்து
பாவனை செய்ததுபோல்
பசுமையாய் இருந்தது
தொடரூந்து பயணங்கள்

ஈபிள் கோபுரத்தின் உச்சில் நின்று
இரவின் ஒளியை இமைக்காமல்
கீழ் நோக்கிப்பார்க்கின்றேன்

சத்தியமாய் என் மனதில்
கோயில் திருவிழாவும் கொட்டும்
மணியோசையும்தான் சிந்தையில்
நிழலாடியது....

என்னவன் காதில் இரகசியமாய்
அதைச்சொல்ல....
அவன் புன்முறுவல் இளையோடுகிறது
இன்னும் என் விழியில்

தமிழ் பள்ளியில் நான் படித்த
நெப்போலியன் வெற்றி வளைவு
எங்கே யென என் மகன் அடம்பிடிக்க
அதைனோக்கி ஓர் பயணம் தொடரூந்தில்

வீரத்தளபதிகளின் நாமங்கள்
சுவரிலே பொறிக்கப்பட்டு
அணையாத தீபமாய் தீச்சுவாலை
நெஞ்சை ஒருமுறை கனக்கச்செய்ய
பன்னிரெண்டு சந்திகள்
அந்தவளைவைச்சுற்றி வட்டமிட

கம்பீரமாய் கண் கவரும் காட்சி
கலையாது கொடுக்கிறது
என் மனக்கண்ணில் மாவீரர்
துயிலுமில்லங்கள்....

நெப்போலியன் இறந்தபின்பு
அவன் நாமம் சூட்டப்பட்ட
அந்த வெற்றி வளைவு
வீரத்தின் சின்னமாய்.....

டிஷ்னி நகரத்திற்கு ஓர் சுற்றுலா
ஐரோப்பிய அந்தப்புரத்தின்
அழகான மாளிகை நடுவே வீற்றிருக்க
வண்ண மயில்கள் தோகைவிரித்தாடும்
அழகு கருசல்கள் ஆனந்தமூட்டும்
சிறியவர் முதல் பெரியோர் வரை


ஆனாலும் இந்திய இளவரசிகளின்
இங்கித நடனமும் சீக்கயர் தலைப்பாகையணிந்து
சிறப்போடு அடிக்கும் டோலக்கும்
டொனால் வாத்தின் அன்ன நடையும்
சூரன் போரை நினைவூட்ட

மனதை கொள்ளை கொள்ளும்
அந்த நகரம் முழு நாளை விழுங்கி
முற்றுப்பெறாது முடிவுற்றது
இன்னும் சில நாள் வேண்டும்
அத்தேசத்தை இரசித்து புசிக்க.....

ஒன்று மட்டும் என் காதில்
ஓரமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது இன்னும்
அக்கா உன் பையும் தொலைபேசியும்
பத்திரம் பத்திரம்- இல்லையேல்
தொலைந்து போயிரும் திருடன் விழிகளுக்குள்
தம்பியின் உபதேசம் மணிக்கு ஒருமுறை

இரசிக்கும் நாட்டில் திருட்டும் தினமொரு
தொழிலாக நகர நரக வாழ்வென்று
நாணிக்குறுகி நாவரண்டது
எமக்குத்தெரியாமலே எம்மோடு பயணித்து
என்பைக்குள் திருடியது தொலைபேசியென்றபோது....

என்மகள் விழிகளில் சட்டென்று பட்டுவிட
திருடன் திருடனென தன் மொழியில் கூச்சலிட
வீரத்தம்பியவன் வீரிட்டெழுந்து விரட்டிப்பிடித்தவனை
விரல்களால் மடக்கி விறுக்கென்று அதட்ட

மிரண்டுபோனவன் பட்டென்று எடுத்ததை
தந்துவிட்டு சத்தமில்லாது மெல்ல நடக்க
காவல் படையிடம் காரணத்தைச் சொல்லிவிட்டு
கலக்கத்தோடு நகர்ந்தோம் பயணச்சுவடுகளில்....
.........
யோகராணி கணேசன்
25.ஆவணி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (5-Sep-19, 12:25 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 766

மேலே