கஸ்தூரி - சிறுகதை

கஸ்தூரி...(சிறுகதை)


ரமணி அன்று அலுவலகம் முடித்து வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்துவிட்டான். வீட்டில் ஒரே நிசப்தமாக இருந்தது. ஏன் இத்தனை அமைதி கதிரும், குணசீலனும் எங்கே போயிருப்பார்கள்? ஆமாம் உமாவைக் கூடக் காணவில்லையே! சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று எண்ணியவனுக்கு ஒரே ஆச்சர்யம் தாள வில்லை. விடு நிறைய பட்டாசுகளும், பொம்மைகளும், விதவிதமான பரிசுப்பொருள்களும் குவியல் குவியலாக இருந்தன.


முத்து முத்து இதோ உன் அண்ணன் ரமணி வந்துவிட்டான் என்ற அம்மாவின் குரல் கேட்கவே, இதோ வந்துட்டேம்மா! என்று கூறிக்கொண்டே கைகளில் வழிந்த மாவைத் துடைத்துக்கொண்டே, அண்ணா வந்துட்டியா! இரு காப்பி தருகிறேன்.. என்று கூறிக்கொண்டே உள்ளே சென்று காப்பி டம்ளருடன் தன் அண்ணனிடம் நீட்டினான் முத்து. என்ன அண்ணா இன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதா என்ன? என்று அவன் முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டே கேட்டான்.
ம்.... ஆமாம்... என்று ஒத்தை வார்த்தையில் பதில் கூறிவிட்டு எதையோ தேடினான். ஓ அண்ணியையும் குழந்தைகளையும் தேடுகிறீர்களா? அவர்கள் இப்பொழுதுதான் தீபாவளிக்கு துணிகள் வாங்க சென்றிருக்கின்றனர்.


ஆச்சர்யத்துடனும், அகல விரிந்த கண்களுடனும் முத்துவை நோக்கினான்..ம்.?
ஆமாம் அண்ணா கஸ்தூரியும் மாப்பிளையும் வந்திருக்கிறார்கள். அவர்கள் தான்...... என்று கூறுவதற்குள் ம்....ம்.... வெடித்தான் ரமணி. ஏது இன்றுதான் சிங்காரிக்கு வழி தெரிந்ததாக்கும்.. அவள் வந்து கூப்பிட்ட உடனே இவளும் சென்றுவிட்டாளாக்கும். ச்..அ என்ன பொழப்பு இது. வெடித்தான்.
என்ன அண்ணா? இன்னமுமா உன் கோபம் தீரவில்லை? என்று கேட்ட முத்துவின் கேள்விக்கு பதில் கூறாமல் சில ஆண்டுகளுக்கு முன் எண்ண அலைகளை ஓட விட்டான்..

டேய்..... டேய்...... டேய்..... அவள விட்டுடுடா..... என்ன இன்னும் அவள் சின்னப் பொண்ணுனு நெனப்பாக்கும். கல்லூரி முடிக்கப் போறா. இது அம்மாவின் குரல். சரிவிடும்மா. அண்ண எங்கூட விளையாடாம வேற யார்கூட விளையாடப் போகுது? அதற்குள் முத்துவும் ஓடி வரவே... மூவரும் இணைந்து கோபி பஸ் விளையாட ஆரம்பித்து விட்டனர். வீட்டில் ஒரே கலகலப்பு. வெளிநாட்டில் வேலை பார்க்கும் தியாகுவிற்கு அந்த மூவரும் தான் செல்லப் பிள்ளைகள். அடிக்கடி கைப்பேசியில் தொடர்புகொண்டு விமலாவிடம் (ரமணியின் அம்மா) தன் குழந்தைகளின் குறும்புத்தனத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஆமாம். இப்படியே போனிலேயே பேசுங்கள்? எப்பொழுதுதான் நேரில் வரப்போகிறீர்களோ? சலித்துக் கொள்வாள் விமலா!. சரி விடுடா செல்லம். வயசு இருக்கும்போதே சம்பாதிச்சாதனே ஆச்சு. எங்க போயிடப் போறேன் இங்க துபாயில் தானே இருக்கேன். என்று கூறிகொண்டே இருந்தவரிடம் இருந்து நீண்ட நாட்களாக பதிலே இல்லை. சரி ஏதாவது அலுவல் காரணமாக இருக்கலாம் என்று எண்ணியிருந்த விமலாவிற்கு திடீரென்ற பேரதிர்ச்சி. ஆம் துபாயில் தியாகு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டதும் அதிர்ச்சி தராமலா இருக்கும். அதன் பிறகு தான் ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் தனக்குத் தெரிந்த கைத்தொழில் வியாபாரமாகிய பலகாரக் கடையை ஆரம்பித்து அந்த வருமானத்தில் மகன்களை ஓரளவு படிக்க வைத்து, மூத்தவனுக்கு ஒரு மெக்கானிக் ஷெட்டையும் வைத்துக் கொடுத்துவிட்டாள். முத்துவிற்கு அவ்வளவாக படிப்பு வராததால் அவனும் அம்மாவிற்கு ஒத்தாசையாகக் கடையைப் பார்த்துக் கொண்டான்.


இதற்கிடையில் பெரிய பணக்கார மாப்பிள்ளையாக வந்த வேலு கஸ்துரியின் அழகில் மயங்கி மணந்தால் அவளைத்தான் மணப்பேன் என்று வைராக்கியமாக இருந்து திருமணமும் செய்துகொண்டான். நாளடைவில் தன் பணக்கார அதிகாரத்தால் தன் மனைவியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று விட்டான்.
பின்னர் சராசரி குடும்பத்தைச் சேர்ந்த உமாவைத் திருமணம் செய்துகொண்டு தன் குழந்தைகளுடனும் தம்பி அம்மாவுடனும் இயல்பான வாழ்க்கையை வாழத்துவக்கியிருந்தான்.
எந்த சூழலிலும் எதற்காகவும். யாரிடமும் கையேந்தக் கூடாது. இருப்பதை உண்டு உடுத்தி வாழவேண்டும் என்ற வைராக்கியத்தில் அனைவரையும் பழக்கியிருந்தபோது தான் கஸ்தூரி வந்திருந்தாள்.


அண்ணா……… என்று ஆவலாக வந்து தன் கழுத்தைக் கட்டிக்கொண்ட கஸ்துரியின் மிருதுவான கைகளின் கதகதப்பில் மீண்டும் சுய நினைவிற்கு வந்தவனாய் போ... என்னோடு பேசாதே!. என்றுகூறி அவள் கையை வெடுக்கெனத் தட்டி விட்டான்.


கோபப்படாதே அண்ணா!. அவர் வருவதற்குள் எல்லாவற்றையும் கூறிவிடுகிறேன். என்று பேசத்துவங்கினாள். அண்ணா! என் மாமனார் மாமியாருக்கு அவர் ஒரே செல்ல மகன் என்பதால் அவரை ராஜா போல் வளர்த்தார்கள். என் மாமியாரின் தம்பி கோபுவின் மகள் வத்சலா சிறு வயது முதற்கொண்டே தன் அத்தானிடம் பிரியமாக இருந்திருக்கிறாள். ஆனால் அதற்குள் இவர் என்னைப் பார்த்ததால் அவர்களின் பெற்றோர்களுக்கு எதிராக அவர்களுக்கு விருப்பமில்லாத என்னைத் திருமணம் செய்துகொண்டார். பதினைந்து ஏக்கரா சொத்து, இருபது பங்களா, மாடு மனை செல்வம் என வாழ்ந்து வந்த ஒரே மகள் வத்சலாவை இவர் மணக்காததே அத்தையின் கோபத்திற்குக் காரணம்.
வேறு வழியின்றி சராசரிக் குடும்பத்தில் இருந்தாலும் கண்ணுக்கு லட்சணமாக இருந்ததாலும், கல்வியும் படித்திருந்ததாலும் அரை மனதோடு என்னை ஏற்றுக் கொண்டார்கள். நாளடைவில் என் குணம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே, என்னை பிரிய மனமின்றி ஊருக்கும் அனுப்பாமல் தங்களுடனேயே தங்கள் பெண்ணைப் போல் பார்த்துக் கொண்டார்கள்.


எத்தனையோ முறை கேட்டிருந்தும் என்னை அனுப்பவே இல்லை. இவருக்கும் வேறு வழி தெரியவில்லை. நம் குடும்பத்தாரிடம் அளவற்ற பாசம் இருந்தாலும் வெளியில் காட முடியாத சூழல்.
அது சரி இப்பொழுது எப்படி வந்தாய்? என்று கேட்ட ரமணியிடம், அதுவா! எங்கள் வீட்டிற்கு அருகில் புதியதாக வந்த குடும்பத்தார் தீர்த்த யாத்திரைகளுக்கு சுற்றுலா அழைத்து செல்பவர்கள். வந்த சில நாட்களிலேயே அத்தையிடமும், மாமாவிடமும் மிக நெருங்கிப் பழகிவிட்டதால், அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல் இவர்களும் தீர்த்த யாத்திரைகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதுதான் சமயம் என்று கூறி இவரும் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலாக வந்துள்ளர் அண்ணா! அவசரப்பட்டு அவரிடம் கோபப் பட்டுவிடாதே! இந்த முறை தீர்த்த யாத்திரை சென்று திரும்பும் அவர்களிடம் நிச்சயமாக மன மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்ற நம்பிக்கையில் தான் இவரும் நானும் உள்ளோம் என்று கூறிய பிறகு தான் ரமணி ஒருவாரு சமாதானம் அடைந்தான். அதுவரையில் மாப்பிள்ளையைத் தவறாக எண்ணியிருந்ததற்காக வருத்தமும் அடைந்தான்,

என்னங்க! இந்த பரிசுப்பொருட்கள்..... துணிமணிகள் ... எல்லாம் என்று மெதுவாக இழுத்த... உமாவிடமும்..... அப்பா! அப்பா!.... ப்ளீஸ் பா,,,, இந்த ஒருமுறை இவற்றை வாங்கிக்கவா! என்று ஏக்கத்தோடு கேட்ட குழந்தைகளுக்கு முன்னால் தோற்றுத்தான் போனான் ரமணி. பிறகு என்ன பழைய கொண்டாட்டம் தான் சுவையான பலகாரங்களை உண்டு புத்தாடை அணிந்து புகை மண்டலமாக சூழ்ந்த அந்த இரவிலும் மின்னி மறையும் வைரங்களான நட்சத்திரங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

எழுதியவர் : (21-Oct-19, 9:41 pm)
பார்வை : 213

மேலே