தீர்த்த யாத்திரை - சிறுகதை

2.தீர்த்த யாத்திரை (சிறுகதை)





வசந்தா! வசந்தா! ஏய் வசந்தா! கூப்பிடறது கூட காதுல விழாதபடி அங்க என்ன பண்ணிண்டிருக்க? இது வனஜா மாமியின் அதட்டல். இதோ வந்துட்டம்மா! அடுப்படில கைவேலயா இருந்தேம்மா! சொல்லுங்கோ! இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல. எங்கேந்துதான் கத்துண்டயோ இப்படி பௌயமா பேசிப்பேசியே என் உசிர வாங்கறத.

சரி சரி ஒரே உப்புசம் பாரு. சித்த அந்த விசிறிய எடுத்து வீசிவிடு. சரிம்மா. ஏண்டி இப்பிடி இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி மூஞ்சிய உம்....முனு வெச்சிண்டிருக்க. அப்பப்பா காத்தல ஏந்திண்டதிலேந்து ஒரே அலுப்பா இருக்கு. சித்த இந்த காலத்தான் பிடிச்சிவிடேண்டி. ஆமா. வெந்நீர் போடச்சொன்னேனே போட்டுட்டயா? அவர் வேற கூப்பிட ஆரம்பிச்சுடுவார். வெத்தலபாக்கெல்லாம் வாங்கிட்டயோன்னோ? சரி.... கொழந்தேளெல்லாம் ஏந்துண்டாச்சா.... இன்னும், சித்த நாழில வேன் வேற வந்துடும். அந்த பாழப்போறவன் வேற கொய்ங்...... கொய்ங்ன்னு... ஆரன அடிச்சுத் தொலப்பான். உன்ன மாதிரியே அவாளையும் சோம்பேரிகளாக்கிடாதே!.

அசடு. ஆவுன்னா அழ ஆரம்பிச்சுடு. இப்ப என்ன சொல்லிட்டேன். டேய் கணேசா. உன் ஆமண்டையாள பாருடா ஒரு வார்த்த பேசிப்பிடக் குடாதே இவளண்ட.

அம்மா! காத்தலயே ஆரம்பிச்சுட்டயா? அடடடடட.... ச்அ என்ன ஆகமோ. எத்தனையோ பேரு கொழந்தேள் இல்லன்னு கோவில் கோவிலா போறா! அவாத்துல போய் பொறந்துருக்கக் கூடாதா? எல்லாம் என் தலவிதி. இது கணேசனின் சலிப்பு.

வனஜா! வனஜா! பூஜைக்கு நாழியாறதோல்யோ? மசமசன்னு அங்க என்னடி பண்ணிண்டுருக்கே? வர வர உம் போக்கே நன்னால பாரு. ஏன்னா! அதா எல்லாத்தையும் பக்கத்துல தானே வெச்சிருக்கேன். இத்தன வயசானாலும் கொழந்தையாட்டும் என்னையே நச்சுங்கோ!

என்னடி முணுமுணுப்பு..... இது மூர்த்தி மாமாவின் கம்பீரக் குரல்.

ஒண்ணும் இல்லேன்னா! இதோ வந்துட்டேன். சொல்லுங்கோ!. பக்கத்துல மடிச்சாருப் பொடவைய
தழைய தழைய கட்டிண்டு வந்து நின்னா வனஜா மாமி. அது இல்லடி.... என்னதான் நீ எல்லாத்தையும் பக்கத்துல எடுத்து வச்சிருந்தாலும், சர சரன்னு நீ இப்படி பக்கத்துல வந்து அம்பாளாட்டும் நிக்கறதே ஒரு தெம்புதாண்டி.. சரிதான் போங்கோ!. இதுக்குத்தான் வரச்சொன்னேளாக்கும்..... ம்......

வசந்தா! சித்த வாயேண்டி...... மறந்தே போச்சு. கொல்லைல பசுமாட்டுக்கு காத்தாலேந்து தீவனம் போடவேல்லடி.. அதுவேற ஒருபக்கம் மா...... மா.......ன்னு கத்திண்டே இருக்குபாரு. நேத்தே அந்த கடக்கர கடங்காரங்கிட்ட நறையா அகத்திக்கீரக்கட்டு வாங்கிண்டு வந்து தொலைகச் சொன்னேன்.. அவன் வேற பாடா படுத்தறான்.

வசந்தா! சரி நீ போய்..... அந்த கோடில இருக்கற கடைல அகத்திக்கீரைய வாங்கிண்டு. மத்தியானத்துக்கும் பிரெஷ்ஷா எதாவது காய வாங்கிண்டு வா!. ம்... அப்புறம் நேக்கு கத்திரிக்கான்னா கொள்ள பிரியம். அதையும் வாங்கிண்டுவாடி. ம்....சொல்ல மறந்துட்டேனே...... மத்தியானத்துக்கு பாகக்கா பிட்டலையும், பொடலங்கா கூட்டும், கத்திரிக்கா எண்ணக்கறியும் சமைக்கணும் தெரிஞ்சதோன்னோ?

நில்லேண்டி.... ரேழில காயப்போட்டுருந்த துணியெல்லாம் மடிச்சிட்டயோன்னோ? அப்புறம் சாயங்காலம் பக்கத்தாத்து பத்மா, சௌந்தரம், அலமேலு, சீதாமாமி, சொர்ணாம்பா எல்லாரும் வெத்தலபாக்கு ரவிக்க வாங்கிக்க வரேன்னிருக்காடி. அவாளுக்குத் தர வேண்டியத எல்லாம் மறக்காம எடுத்து வெச்சுடு. புரியறதோன்னோ...... கேக்க மறந்துட்டேனே. கொழந்தேளுக்கு டான்ஸ் சொல்லித் தரத்துக்கும், சங்கீதம் சொல்லித் தரதுக்கும் கௌசல்லா டீச்சர் வரேன்னு சொல்லியிருந்தா. இன்னைக்கு நாள் நன்னா இருக்கு பாரு. அவ இங்கேந்து மூணாவது தெருவுல தான் இருக்கா. கடைக்கு போயிட்டு வரச்ச அவாத்துக்குப் போய் ஒரு தடவ நெனவுபடுத்திடு.... புரியறதா?

அப்பப்பா....... வயசானாலே எல்லாம் மறந்துடும் போல இருக்கே! இனிமேட்டு அத்தனையும் ஒரு தாள்ல மறக்காத எழுதிவெச்சுக்கணும்.
இன்னும் ஏதாவது பாக்கியிருக்கான்னு அவளையே பாத்துண்டு நின்னிண்டிருந்த வசந்தாவிடம்... என்னடி பகல் கனவா கண்டிண்டிருக்கே.... போடி... நாழியாறதோல்யோ?

வனஜா! டிபன் ரெடியா? பாரு நானும் கணேசனும் எத்தன நாழி எலைல உக்காந்திண்டிருக்கறது? கணேசனுக்கு ஆபிசுக்கு நேரமாறதோல்யோ? இது மூர்த்தி மாமா.
இதோ வந்துட்டேண்ணா. அதா மருமா வந்துட்டாளோல்யோ? இன்னும் ஏன் என்னையே பிராணன வாங்கறேள்? அவ போட்டா சாப்பிட மாட்டேளாக்கும்....
இந்த பாருடீ .... எத்தன பேர் இருந்தாலும் உன்னோட கண்ணாடி வளையல் ஓசை குலுங்க நீ பவ்யமா பரமார்றதே ஒரு அழகுடீ.... சரி... சரி... வா.....
என்ன முனகல்.....

ம். ஒண்ணுமில்லடி.....
சரி.... சரி.... அதான் அசடு வழியறதே!. இந்தாங்கோ. டேய்.... நீ என்னடா.... என்னையே பாத்துண்டிருக்க... இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கோடா… சரியான அம்மா கோண்டு....
வசந்தா..... வசந்தா..... ஜலம் எடுத்துண்டு வா.....
இதோ வந்துட்டம்மா......

ஆமா..... கொழந்தேள்ல்லாம் டெடியாயிட்டாளா? அவாளயும் கூப்பிடு...... அவாளும் சட்டுபுட்டுன்னு சாப்டுட்டு களம்பட்டும்....
அப்பா! ஒருபாடா எல்லாரையும் அனுப்ச்சாச்சு...... தாயே..... மகமாயி...... இதோ வரேண்டி. என்று சொல்லிவிட்டு...... பூஜை அறையில் அமர்ந்து....... “மங்கள நாயகி...... மலரடி..... பணிந்தேன்.... மகிழ்வுடன் எமைக் காப்பாய்......”. என்று பாடிக்கொண்டே..... பூஜையை முடித்து விட்டு ஹாலில் வந்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் வனஜா!...

அப்பாடி.... இந்த புக்காத்துக்கு 8 வயசுல தொங்க தொங்க தாலியக் கட்டிண்டு.... என்ன தெரியும் நேக்கு.... ச் அ...... என்ன மனுஷாளோ? அப்பாப்பா நல்ல எடம்னு அம்மாவும் அப்பாவும், இந்த சம்சாரத்துல என்ன தள்ளிப்டு அவாளும் ஒருபாடா போய்ச்சேந்துட்டா. இதோ அப்படி இப்படின்னு நேக்கும் 77 வயசு ஆப்போறது. பெரிய குடும்பத்துக்காராளுக்கு வாக்கப்பட்டு, எததன வேல.... எததன வேல..... அப்பப்பா.......ம்ஹும்..... பெருமூச்சுவிட்டாள் வனஜா மாமி.

இந்த காலத்துப் பொண்களுக்கெல்லாம் வணங்கி வேல செய்யறது எத்தன கஷ்டமா இருக்கு.... ம்ஹும்..... ஈஸ்வரா..... என்னாட்டுமெல்லாம் இவாள்ளாம் இருந்தா என்ன பண்ணுவாளோ. இந்த 25 வயசுக்கே இவ இப்படி சலிச்சுக்கறாளே. பொறந்தாத்துலேந்து வரப்ப ஒண்ணுமே தெரியாம பரப்பிரம்மமா வந்த இவளுக்கு அம்மா போல ஒத்தாசையா இருந்து எத்தன வேல பழக்கித் தந்திருப்பேன். அதுக்கெல்லான் துளிகூட இவகிட்ட நன்னியே இல்லையே! ம்ஹும். ஈஸ்வரா. அடுத்த மாசம் நான் இவள விட்டுட்டு காசிக்குப் போயிட்டா என்ன பண்ணப் போறாளோ?

எப்ப பாத்தாலும் அம்மா.... அம்மா..ன்னு.... என் கால்மேட்டிலயே உட்காந்திண்டிருக்கா. பாவங் கொழந்த.... என்ன பிரிஞ்சா இவளால தாங்க முடியாதே! அதான் இவகிட்ட கடுமையா நடந்துக்கிற மாதிரி நடிக்க வேண்டியிருக்கு,,,,, ஈஸ்வரா. பாவம் வசந்தா! நீதான் அவள காப்பாத்தணும்.
எத்தன நாள் கனவு இந்த காசியாத்திரை... இப்பதான் வெடிஞ்சிருக்கு.... அம்மா மகமாயி...... நல்லபடியா எங் காலத்துக்குள்ளயே..... போயிட்டுவந்துடணும். இப்படியே நெனச்சிண்டே நாற்காலியில் சாய்ந்தாள் வனஜா.

அம்மா..... அம்மா.... மாமியெல்லாம் வந்துட்டா,,,, வெத்தல பாக்கு ரவிக்க துண்டெல்லாம் அப்பவே எடுத்து வெச்சுட்டேம்மா.. நீங்க வந்து கம்பீரமா கௌரீ கல்யாணம்... வைபோகமே...ங்கற பாட்டையும்,…… பாக்யாத லஷ்மி பாரம்மா......ங்கற பாட்டையும் பாடுங்கோம்மா..... என்றவள் அதிர்ந்தாள்.
ஆம். வனஜா மாமி தீர்த்த யாத்திரை சென்றுவிட்டாள். அது நாள் வரை அப்பழுக்கின்றி தன் கடமையை செவ்வனே ஆற்றிய வனஜா மாமி தீர்த்த யாத்திரை சென்றுவிட்டாள்.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (22-Oct-19, 8:03 pm)
பார்வை : 140

மேலே