சாந்தி

கோழி கூவியது சத்தம் கேட்டு டக்கென எழுந்தாள் சாந்தி. மணி என்ன ஆகும் இருட்டில் துழவி கைப்பேசியை எடுத்தாள் அது அவள் கடின உழைப்பில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது. மணி 3.30 எனக் காட்டியது அவசரமாக எழுந்தாள் வாசலுக்கு சென்று தண்ணீர் தெளித்து கோலமிட்டாள்.ஏழ்மை அவளிடம் குடி இருந்தபோதிலும் அவள் நல்ல நிறம் சரியான உயரம் தேவதையாக இருக்க வேண்டியவள் .கடவுள் ஏனோ அவளை வஞ்சித்து விட்டான்.சாந்தி கோலமிட்டு முடித்து பின் புற புறக்கடைக்கு சென்றாள். பானையில் இருந்த நீரை தொட்டுப் பார்த்தாள் சில்லென இருந்தது குளிர்வேறு என்ன செய்வது குளித்து விட்டு அவசரமாக கண்ணாடி முன் நின்று தலையை வாரி சிறிது பூவை தலையில் வைத்துப் பாவை வாசலுக்கு வந்தாள்.

அவளது இரு சக்கர வாகனம்(மிதிவண்டி ) தயாராக இருந்தது அதை கனத்த மனத்தோடு பார்த்தாள் மனதுக்குள் அதற்கு நன்றி கூறினாள். மணியைப் பார்த்தாள் 4 ஆகி இருந்தது .அவசரமாக அதை மிதித்து காற்றை கிழித்துக் கொண்டு சென்றாள். டீச்சர் வீட்டை அடைந்தாள் காலிங் பெல்லைத் தட்டினாள் கதவு திறந்தவுடன் அவசரமாக உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து வாசலில் தெளித்து அவசரமாக இருந்த பாத்திரங்களை கழுவி கவிழ்த்து வைத்தாள் அதில் ஒரு நேர்த்தி தெரிந்தது.பின் வீடு கூட்டினாள். டீச்சரம்மா மிகவும் நல்லவர் அவள் உழைப்பை கண்டு வியந்து டீ போட்டுக் கொடுப்பார்.அம்மா வரங்கமா என விடைபெற்று மிதிவண்டியில் ஏறி யூனியன் அலுவலகத்தில் வேலை செய்யும் கவிதா வீட்டுக்குப் போனாள் அங்கு சகல வேலையும் அவள்தான் செய்ய வேண்டும் எல்லாவற்றையும் முடித்து அவள் வீட்டை அடையும் போது மணி ஆறெனக் காட்டியது

வீடு கூரை வீடும் கிடையாது காரைவீடும் கிடையாது நான்கு இரும்பு தகடு சுற்றி இருந்தது அவ்வளவுதான் வீடு. மணம் கொண்ட கணவனைப் பார்த்தாள் அவன் கிழிந்த நாராகக் கிடந்தான்.அவன் குடியும் கும்மாளத்துடன் வாழ்ந்துக் கொண்டிருந்தவன் மனைவியைப் பற்றியோ குழந்தைகளைப்பற்றியோ கவலைக் கிடையாது . ஆறு மாதங்களுக்கு முன்புதான் குடியால் உடல் கெட்டுப் போனது.அவனை மருத்துவ மனையில் சேர்த்ததில் கல்லீரலும் குடலும் கெட்டுப் போயிருக்கிறது .மருத்துவர்கள் இனி குடிக்கக் கூடாது குடித்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை எனச் சொல்லி அனுப்பினார்கள்.உயிர் பயத்தில் மூன்று மாதம் குடிக்காமல் இருந்தான். உடல் ஓரளவு தேறியவுடன் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டான். அவள் எவ்வளவு கெஞ்சியும் திட்டியும் அவன் கேட்பதாக இல்லை அவள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த எட்டாயிரம் ரூபாயை குடித்தே அழித்துவிட்டான் .இன்று அவன் பாயோடு நாராகக் கிடக்கிறான் .பெரு மூச்சு விட்டபடி தன் தலைவிதியை நொந்துக்கொண்டாள்.

பெண் ஒன்று ஆண் ஒன்று என கண்ணுக்கு அழகாய் இரு குழந்தைகள். மகள் ஏகாம் வகுப்பு, மகன் நான்காம் வகுப்பு. மகள் ஒருவாரத்திற்கு முன்புதான் ஆளாகியிருந்தாள். இருவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே அவசரமாக சமையல் செய்து மகளுக்கு தலைசீவி சடை பின்னினாள். மகனுக்கு தலைசீவி இருவரையும் சாப்பிட செய்து பள்ளிக்கு அனுப்பினாள். கணவனை எழுப்பி கஞ்சி புகட்டினாள்.பின்பு பேருக்கு ஏதோ சாப்பிட்டாள்.

மணி எட்டாகி இருந்தது மிதி வண்டியில் ஏறி செங்கல் சூளைக்கு
சென்றாள். சுட சுட கல்லை இறக்க வேண்டும் சில சமயம் கையை கல் பதம் பார்க்கும். கல் ஆறியவுடன் லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்று ஆங்காங்கே இறக்க வேண்டும். இறக்கி முடிக்கும் போது மணி மாலை ஆறாகி இருந்தது.
மீண்டும் மிதி வண்டியில் ஏறி வீட்டை அடைந்தாள். அவசரமாக உப்புமா கிளறி இறக்கி வைத்து விட்டு மீண்டும் ஒரு பட்டுப்பூச்சி அலுவலகத்தில் பெருக்கும் வேலை. பின்பு ஒரு மகளிர் குழு அலுவலகம் என எல்லாவற்றையும் பெருக்கி முடித்து வீட்டை அடையும் போது மணி பத்தெனக் காட்டியது. குழந்தைகள் இருவரும் உறங்கி இருந்தார்கள். அவன் மட்டும் ஏதோ உளறியபடி கிடந்தான்.

அவனுக்கு கஞ்சி புகட்டி அவள் உப்புமா சாப்பிட்டுவிட்டு படுத்தாள்.சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள். அவனது இருமல் சத்தம் கேட்டு கண் விழித்தாள்
அவன் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டான் அவனது தலையை தூக்கி தண்ணீர் புகட்டினாள். அவன் ஏதோ சொல்ல வந்தவன் சொல்ல முடியாமல் கண்ணில் இருந்து நீர் வழிந்தது. அவள் கரங்களை பிடித்தபடி மூச்சு விட மறந்துப்போனான்.

அவளது அழுகை சத்தம் இரவைக்கிழித்தது! குழந்தைகள் பயத்தில் அலறியபடி எழுந்தார்கள். தகப்பன் இறந்தது தெரிந்து இரண்டும் கதறின
தெரு மெல்ல கூட ஆரம்பித்தது. அவள் பூ வைத்ததும் பொட்டு வைத்ததும் அன்றோடு இறுதியானது,,,!,,! இன்று அவள் ஒரு இளம் விதவை வயது முப்பத்து மூன்று !!!!! அவள் சிறந்த வாழ்க்கைப் போராளி...... வாழ்க்கை கண்ணீர் காவியமானது .....

சாந்தியின் வாழ்வு பறிபோனது குடிப்பழக்கத்திற்கு ஆளான ஆணால்தான்!
இது போன்று நிறைய சாந்தி உள்ளார்கள். ஆடவர்களே கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் மனைவி குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்...

சாந்தியின் கதை கதையல்ல உண்மையில் நடந்த நிகழ்வு.....!!!!!

எழுதியவர் : உமாபாரதி (23-Oct-19, 11:15 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : santhi
பார்வை : 207

மேலே