ஏன் இப்படி

ஏன் இப்படி?

என்னுள் எழுகிற
இக்கேள்வி
திருவிழாக் கூட்டமொன்றில்
தெருவோரம் வீசப்பட்ட
காதறுந்த
ஓற்றைச் செருப்பாய்
கிடக்கிறது

ஏன் இப்படி?

அவள்
என்னுடன் தான்
இருக்கிறாள்
பேசுகிறாள்
சாப்பிட்டாயா
என கேட்கிறாள்
சிரிக்கிறாள்
என்னைச் சபிக்கிறாள்
கோபப்படுகிறாள்
கொதித்தெழுகிறாள்
முறைக்கிறாள்
பேசாதே என்கிறாள்
சிலசமயம்
பேசவேசெய்யாதே
எனச் சொல்லிவிடுகிறாள்

ஏன் இப்படி?

அவளோடு பேச
நானும் என்மனமும்
தினந்தினம் எத்தனை
முன்தயாரிப்புகளோடு
காத்திருப்போம் தெரியுமா

அவளின் "ஹலோ"
என் இரத்த அணுக்களை
துள்ளிக்குதிக்க
தூண்டிவிடும்

காற்றோடு கலந்து பேசும்
அவள் காதல்மொழி
பன்னீராய் மேல்தூவும்

வார்த்தைகளுக்கு இடையில்
அவள் சிந்தும்
மூச்சின் சப்தத்தை
தொல்லையின்றி ரசிப்பேன்
சிலநேரம் சத்தமாய் மூச்சுவிட
நானே மறுப்பேன்

ஏன் இப்படி?

என் காலி இதயத்தை
காதல் தேனூற்றி
நிரப்பிய தேவராணி
அவள் -
அவளின்றி ஓரணுவும்
அசைவதில்லை என்னுள்

ஏன் இப்படி?

என்னை அவள் வெறுத்து
ஒதுக்கியிருப்பாளோ?!
என நினைத்தாலே

வியர்த்த முன்நெற்றியில்
அவள் விதைத்த முத்தத்தால்
விளைந்த அதிர்வுபோல
என் இதயம்
அதிர்ந்து திணருகிறது

ஏன் இப்படி?

ஆம்
அவள் கோபக்காரிதான்
தேள்போல் கொட்டிடுவாள்
விசவார்த்தை வீசிச்செல்வாள்

விசம் தலைக்கு ஏறும்முன்பே
ஓடிவந்து முத்தஉதவி செய்து
பாசம் மட்டும் மிச்சம் வைப்பாள்

ஏன் இப்படி?

சில கேள்விகளும்
சில்மிஷ கொஞ்சல்களும்
காதல் வாதங்களும்
காயம்பட்ட முத்தங்களும்
நீண்ட சிரிப்புகளும்
நெளிந்த பதில்களும்
அவளுக்கு பேதுமானது
என்னைத் திட்டித்தீர்க்க

ஒவ்வொரு
ஊடலின்போதும்
நொடி விலகி
பின்
தேடிவந்து என்னுள்
தீர்ந்து போகிறவளே....

ஏன் இப்படி?

எழுதியவர் : பாரதிநேசன் (25-Oct-19, 4:09 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
Tanglish : aen ippati
பார்வை : 103

மேலே