காதல் காதல் மயக்கம்
மனதிற்கும் இதயத்திற்குமான
இடைவெளியில் மலர்ச்செடிகள்
பதியம் போடுவதற்காக
அவன் புன்னகையை திருடினேன்
இரவுக்கும் பகலுக்குமான
இடைப்பட்ட அதிகாலையில்
வெண் நிலவான அவனின்
தரிசனத்திற்காக தினமும் காத்தும்
கிடக்கிறேன் கவிதைகளை
கண்களில் ஏந்தியபடி...
மௌனமாய் ஒலி எழுப்பி
சுவர்க்கோழியாய் அவன் தியானத்தை
கலைப்பதில் கவனமுடன்
செயல்படுகிறேன் காகமென்று என்னை
அவன் நினைத்துக்கொண்டாலும்
எல்லாம் நன்மைக்கே என்று...
பொறுமையின் எல்லைவரை
எப்போதும் என் கைபிடித்து அவன்
அழைத்து செல்லவேண்டுமென்ற
எதிர் பார்ப்பில் இன்று சற்று
அழுத்தமாகவே கிள்ளிவிட்டேன்
அவன் இடது கன்னத்தை...
சிவந்த கன்னத்துடனும்
சிவக்கும் கோபத்துடனும்
இப்போதெல்லாம் எல்லையைகடந்தே
செல்கிறான் சில நாட்கள்
நான் தவிக்கட்டுமே என்ற
மனநிலையுடன்...
ஊடலுடன் கூடிய காதலில்
இப்போது இருவருமே
தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்பதை
மனமுவந்து ஏற்றுக்கொண்ட
இத்தருணத்தில் திருமணத்திற்கு
தயாராகிவிட்டேன் இந்த பொல்லாத
காதலை மென்மையாய் தொடர்ந்திட...