ஆஷிஃபாக்களுக்காக
நெற்றியில் பொட்டிட்டு
வண்ண வண்ண
வளையல்களிட்டு
சலசலக்கும் கொழுசு மாட்டி
மணமணக்கும் மல்லி வைத்து
சிகை அலங்காரத்தோடு
புத்தாடை அணிவித்து
சிங்காரியை முத்தமிட்டு
சீமைக்கு விளையாட
அனுப்பி வைத்த தாய்க்கு.,
உடலில் ரத்தம் கசிந்த
பேச்சு மூச்சற்ற
பிணமாய் வந்திறங்கிய குழந்தையைப்
பார்த்ததுமே ஐயையோ போய்ட்டியே-னு
அழுகத் தோன்றுமா?
இல்ல உண்ண இப்படியாக்குனவன்
யாருன்னு கேட்டு
கேஸ் போடத் தோன்றுமா?
பாழாப் போனவன்
என் புள்ளைய பாழாக்கிப் போனானே - னு
அழுவாளா ? இல்ல இன்னொரு பெண் குழந்தைய வீட்டோட வைப்பாளா?
வீட்டோட வச்சாலும்
வெறி புடிச்ச ஆம்பளைங்க
வேட்டை நிக்காதே …
ஐயையோ! நான் பெண்ணா
பொறந்தது தப்பா?
இல்ல உன்ன பெண்ணா பெத்தது
தப்பா.?
வெளிநாடு போன உன்
அப்பன் வந்து கேட்டா
அப்பன் முறையில
இருக்கிறவன் தான் உன்ன
சிதைச்சான்னு நான் எப்படி - டி
சொல்லுவேன்..?