வண்ணப் பாடல்
வண்ணப் பாடல் ...!!!
***************************
தய்ய தனன தய்ய தனன
தய்ய தனன தனனானா (அறையடிக்கு )
அல்லில் விரியு மல்லி மலரி
னள்ளு மழகு மினிதாமே
அல்லல் விலகி யுள்ள மலரு(ம்)
அவ்வி தழத னொளிபோலே!
செல்ல மழலை வெல்லும் மனது
செய்யு மினிய குறும்போடே
செல்வ மிதென வில்ல முலவு
தெய்வ வடிவு மதுதானே !
இல்லை யெனவு முள்ள தெனவு
மெள்ளி நகையும் புரிவாரால்
எள்ளி னளவு மில்லை பயனு(ம்)
எவ்வ மினியு மறையாதோ
செல்லும் வழியி(ல்) ஒவ்வு முறவு
செய்யின் வளியி லிதமாகும்
செல்வி நினைவை மெல்லும் பொழுது
செவ்வி தழ்களும் மலராதோ ?
எவ்வம் - துன்பம்
செய் - வயல்
சியாமளா ராஜசேகர்