21 அவளுடன் பேசும்போது

______======_____=====

திங்கள் 21.2019 மாலை 6.30

அவள் வீட்டுக்கு போனபோது தன் பயண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தாள்.

ஸ்பரி...என்று ஆர்வமாய் கூக்குரலிட்டாள்.

ஆலப்புழை பற்றிய இணையக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டு ஒழுங்குடன் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக பார்த்தபடி இருந்தேன்.

அவளை மெள்ள ஆதுரத்துடன் அழைத்தேன்.

என்ன என்பதை போல ஒரு பார்வை.

"நாம் திருமணம் செய்து கொள்வோமா?"

அவள் அடக்கவொட்டாது சிரித்தாள்.

"நீங்கள் இப்படி கேட்பது எட்டோ அல்லது ஒன்பதாய் கூட இருக்கலாம். ஏதேனும் தோழியின் வாட்ஸப் கருத்து வந்ததோ?"

அவள் சிரிப்பு அடங்கவில்லை. இந்த விஷயத்தில் நான் எப்போதும் அவளுடன் பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பேன்.

ஸ்பரி...நீங்கள் அதை விரும்பினால் நான் மறுப்பு சொல்லவா போகிறேன்...உண்மையில் உங்கள் மனதில் இருப்பது எனக்கும் தெரியுமே.

நீ திருமணம் செய்தால் ஒரு பாதுகாப்பு அன்பு நேசம் நிம்மதி எல்லாம் கிடைக்குமே.

இப்போது அது இல்லாமலா நான் இருக்கிறேன்?

நாம் திருமணம் பற்றி பலமுறை பேசி விட்டோமே...அதை ஒரு காப்பீடு போல என்னால் வைத்துக்கொள்ள, பராமரிக்க இயலாது.

ஸ்பரி...ஒரு பெண்ணுக்கு உருகுவதும் ஒரு பெண்ணை உருக்குவதும் உங்கள் வேலை அல்ல என்பதும் எனக்கு தெரியும்.

இருந்தாலும்...நீ என்னை...

"பாருங்கள் ஸ்பரி...என்ன விளையாட்டு இது?
உங்கள் கருணையால், அன்பால் என்னிடம் கொஞ்சக்கூட தெரியாது உங்களுக்கு...
ஒரு கணவன் எனக்கு தரும் பாதுகாப்பு மட்டும் பற்றாது. என் கற்பனைகளை, நப்பாசைகளை, வளைந்து கிடக்கும் ஈர்ப்புகளை கருத்தால் நொறுக்க வேண்டும். அவன் வேட்டி நுனியில் எனது நிழல்கள் காப்பாற்றப்படுமென்ற பூச்சாண்டித்தனங்கள் எனக்கில்லை ஸ்பரி"

உன் மனதுக்கு கொஞ்சம் இனிமை, சாந்தம் கிடைக்கும். காதல் எத்துணை அழகிய அன்பு தெரியுமா..ஆகவே நீ...

"நாம் காதலிக்கிறோமா ஸ்பரி..? ஊர் அப்படித்தான் பேசுகிறது. உங்கள் பணியிடத்து தோழர்கள் உங்கள் காதலிகளின் பெயர்களை கால் விரல் விட்டும் எண்ண முடியாது என்று என்னிடம் சொன்னது உண்டு. அந்த பெண்களில் எத்தனை பேர் உங்களிடம் சொந்த பிரச்சனைக்கு கொதித்து அழுததுண்டு என்பதும் தெரியும். பிறகு ஏன் என்னிடம் இப்போது கல்யாண வாஞ்சை.."

அதாவது...என்று ஆரம்பித்தேன்.

இல்லை ஸ்பரி...இன்று ஏதோ நடந்து உள்ளது. இல்லையேல் இப்படி பேச மாட்டீர்கள். என்ன ஆயிற்று?

வழக்கம்போல் நடப்பதுதான்.

சொல்லுங்கள் ஸ்பரி...

பெண்கள் தன்னைத்தானே கொஞ்சிக்கொள்ள கூடாது என்பதில் மிக பிடிவாதமானவள் நீ. ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் இடம் தீர்ப்புக்கு அடுத்த அம்சமாய் இருக்கிறது எனும் உன் ஆச்சர்யம் பார்த்து வியந்து போனவன் நான்.

கனவுகள் அற்ற, பசியை பொருட்படுத்தாத குணம் கொண்டவள். எனது முட்டாள்தனம் எனக்கு புரிகிறது ஸ்பரி...இந்த கவிதையில் நான் சொல்ல நினைத்தது இல்லை. ஆயினும் பாராட்டுங்கள்...உழைத்திருக்கிறேன்...என்று என் கரத்தைப்பற்றி உன் தலையில் வைத்துக்கொண்ட நாட்கள் மட்டும் கொஞ்சமா என்ன?

உன் வாழ்க்கையில் நீ பலமாய் பற்றிக்கொண்டது உன்னைமட்டுமே என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்படி உன் போல் நான் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. அப்படி ஒரு பெண்ணின் அனுபவம்தான் இன்று வந்து சென்று மறைந்தது.

பேசும்போதே பின் நகர்ந்து செல்வது, உடைந்து சிதறிப்போவது, ஆசைகளில் கற்பனைகளில் தன்னை ஆதிக்கமாய் பெருக்கிப்பார்ப்பது, இப்படி எல்லாம் ஒருவர் தன்னை அறிய முற்படும்போது அது ஒரு சுயகொடுமை செய்து கொள்வது அல்லவா? அதை உணர்த்த முயல்கையில் உறவில் சிடுக்கும் அனர்த்தமும் உருவாகி விடுவதை பார்க்கும்போது இன்னும் வேதனை வருகிறது என்றேன்.

மடித்துக்கொண்டிருந்த உடைகளை வைத்துவிட்டு கன்னங்களை பற்றிக்கொண்டாள்...

ஸ்பரி...

"நாம் திருமணம் செய்து கொள்வோமா?"

ஒரு கணம் கண்களை பார்த்தாள்.

நான் சிரிக்க சிரிக்க அவளும் சிரித்தாள்.
குட்டிகள் கும்மாளமாய் வளையமிட்டது.


____=====_____=====___

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Jul-20, 3:12 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 57

மேலே