மோகனக் கற்பனை
ஆடிவரும் இளந்தென்றல்
மயங்கி நிற்கும் மாலை
வானவீதியில் நகைத்தபடி நகரும் வெண்ணிலா
சிதறிய முத்துக்கள் ஆங்காங்கே நட்சத்திரமாய் கண்சிமிட்ட
கோர்க்க வழிதெரியாமல் முகிலினங்கள் அங்குமிங்கும் அல்லாட
இரவின் விளையாட்டை இரசித்தபடி நான்!
காற்றோடு கலீர்கலீரென மிதந்து வரும்
வளையோசை காதில் இனிமை சேர்க்க!
இதயத்தில் பெருமகிழ்ச்சி...
கண்கள் ஓசைவழி நோக்க
கைகள் வீசி நுண்ணிடை இலங்க
மலராய் உலாவி வந்தாள் அழகின் பிறப்பு!
விழிகளின் இருண்ட கருமணிகள்
வீசிய ஒற்றைப் பார்வையில்
நீரும் இருக்கிறது நெருப்பும் இருக்கிறது
விசித்திரச் சேர்க்கையல்லவா...
பறிபோகாமல் என்னசெய்யும் என் இதயம்!
நடுநிசி பேசாமடந்தை பவள இதழ் நீக்கி
இதயமுருகிப் பேச இதயத்தில் ஏதேதோ
எண்ணங்களை எழுந்துலவ...
கவிந்திருக்கும் இருட்டு
காமனுக்கு துணைபுரிய!
தொலைந்த நாணங்கள்
வார்த்தைக்குத் தடை போட!
சிந்தையில் எழும்
மோகனக் கற்பனைகள் பல..!