ஆடை

ஆடை
மானம் காத்துக்கொள்ள
மனிதன் கண்டுப்பிடித்தது
மானம் இழந்தவனும்
மானத்தின் அர்த்தம் புரியாதவனும்
நல் ஆடைக்குள் தன்னை புகுத்தி
சமுதாயத்தில்
மானத்தோடு வாழ்வதாக காட்டிக்கொள்கிறான்

கறைப்படிந்த ஆடைக்குள்
உத்தமபுத்திரனும்
கறைப்படியாத ஆடைக்குள்
அய்யோக்கியனும்
ஆடையும் ஒருவித முகமூடியே

ஆடைக்குள்
மதம் ஒளிந்திருக்கிறது
ஆடையை வைத்தே மதத்தை
சொல்லிவிடலாம்
மதம் பிடிக்காத ஆடைக்கும்
மதம் பிடித்திருக்கிறது

விலங்குகள் ஆடை உடுத்துவதில்லை ஆனாலும்
மானத்தோடு வாழ்கிறது

கம்பங்களும் கூட நாட்டில்
விதவிதமான ஆடை அணிந்திருக்கிறது
சில ஏழைக் குழந்தைகளுக்கு
பிறந்த மேனியே ஆடையாய்
இருக்கிறது

மனிதன்
ஆடை விலக்குவதில்
கைதேர்ந்தவன்
தானியங்களின் ஆடையை
விலக்கி தனக்குத் தானே
நோயை ஏற்படுத்திக் கொள்கிறான்

ஆடைகளில்
எனக்கு பிடித்ததெல்லாம்
என் ஆத்தா உடுத்தும் அந்த
எட்டுமுழ ஆடை

தூளிக்கட்டிக்கொள்ள
தரையில் விரித்துப்படுக்க
முகம் துடைக்க
என பலப்பல
இதை என் சவத்தின் மேல்
போர்த்தினால் எனக்கு
தேசியக்கொடி போர்த்திய மகிழ்ச்சி...

ஆடை மனிதனின் அடையாளம்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Jan-21, 4:48 am)
Tanglish : adai
பார்வை : 309

மேலே