அப்பா நாமும் சென்றிட வேண்டுமாம்

"அப்பா நாமும் சென்றிட வேண்டுமாம் - நமை
அணைத்துக்காத்து ஆள்பவரின் ஆணையாம்
எப்போதிங்கே பெருந்தொற்று தோற்குமோ
அப்போதுதான் நாம் திரும்புதர் கூடுமாம்".

வார்த்தையைக் கேட்ட வயோதிகர் அதிர்ந்தார்.
"வாழ்ந்தது இதுவரை இத்தரையிலல்லவா?
போர்திப்புதைந்து சொந்த ஊர்விட்டு வந்தபின்
வாழ்த்தி வளர்த்தது இம்மண்மைந்தரல்லவா?

எத்தனை காலம் உடுக்கை இழந்தோர் நாம்
இத்தரையினை மோட்சமாய்க் கொண்டோம்!
அத்தனை பேரையும் அணைத்துப் பிணைத்து
ஆளாக்கியதிப் புண்ணிய பூமிபூவை தானே...?

கல்லை ரொட்டியாய் மண்ணை சாதமாய்
உண்ணத்தந்திடினும் அவள் என் உயிரல்லவா?
புல்லையே பாயாய் பாறையே புகலிடமாய்த்
தந்திடினும் அவள் என் தாயேயல்லவா...?

ஊரென்று இருந்ததாம் எமக்கொருநாள் எங்கோ
ஊரார் பிள்ளையையும் அது ஊட்டி வளர்த்ததாம்
யார் யாருக்கோ இடம் கொடுத்த அவ்வகம்
வேரோடு எமை மட்டும் பெயர்த்ததும் ஏனாமோ!

அகதியாய் அனாதையாய் நான் வந்தபோது
அடைக்கலம் அளித்தது இவ்வம்மணியல்லவா?
சகதியும் புழுதியும் உறைவிடம் ஆகினும்
மறந்தும் எங்கனம் மறப்பேன் நானிவளை?

மகனே! நீயெனை மன்னித்துவிடு! இம்
மண்ணில் மடிந்திட எனை விட்டுவிடு!
அகமே இழந்தபின் ஆயிரம் கிடைப்பினும்
இகமே இழத்தல்போல் எண்ணத் தோன்றுது.

எங்கோ சென்று இம்முதிர் வயதினிலே
எவரோ சேர்த்ததை உண்ணுதல் நியாயமோ?
அங்கேயே செல்லென அவர் சொல்வாரெனில்
அங்கமதில் எந்தன் ஆவிதான் தங்குமோ...?"

என்று சொலியவர் சென்றிட மறுத்தார்.
எண்ணிய தனையனும் உடனுறைய இசைந்தான்
உள்ளுணர்வுகளைத் தொற்றுதான் அறியுமோ?
உயிரைக் குடிக்க எமன் தான் தயங்குமோ...?

கொரோனா என்பது காரணம் மட்டுமே - அவர்
காயத்திலுயிர் உறைவதும் குறைவதும் - அது
ஞாலத்தை ஆண்டிடும் அரசரே ஆயினும்
காலத்தின் கூட்டல் கழித்தல் கணக்கன்றோ?

ஊராசை என்பதா? பேராசை என்பதா? இல்லை
உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தலென்பதா?
எதுதான் எவர்தான் எங்ஙனம்தான் கணிப்பினும்
இவர்கள் முடிவும் இயற்கையின் இலக்கணம்தானே...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (7-Mar-21, 1:43 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 70

மேலே