நானொரு குரு
காணிக்கையென
கடவுளெனைக்
கைக்கொண்டார்;
நீங்களோ
தூசியென என்னைத்
தூசிக்கிறீர்களே...
என்னை
ஏசும் உங்களுக்கு
ஏசுவுக்குக்கோயில்கட்ட
எப்படித்தான் மனம்வருகிறதோ...!
உண்மை, நீதி,
அன்பெனும் மலர்களை
உங்கள்
உள்ளச்சோலைகளில் மலர்விக்க
என்
அகப்புவியில் கிளறும்
ஆசைப்புரட்சிகளை நீங்கள்
ஆதரித்து
அங்கீகரிக்காததேனோ...!
என் நற்பணிகளுக்கு
நீங்கள் ஈவதெல்லாம்
அவதூறு எனும்
அபாரக்கூலி.
என் இதயத்தில்
பழிமுட்கிரீடங்களைப்
பதித்து அழுத்தும் நீங்கள் - உங்கள்
பாவங்களைக்கூட
விதியின் விளையாடலென
வருடி விடுகிறீர்களே...
என் கல்வாரிகளும்
சிலுவைகளும்
உங்களுக்கு - வெறும்
பொம்மலாட்டங்கள்...
என் இலட்சியப்பாதைகளில்
தடையிடும் நீங்கள்
பயணிக்க மட்டும்
என் தோள்களையே
பற்றிக்கொள்வதேன்...?
பரவாயில்லை.
தோள்களைமட்டுமன்று
துன்பக்கடல் கடக்க - என்
உயிரையே உங்களுக்குப்
படகாய்த்தருகிறேன்.
என்
சொற்களில் முத்துக்குளித்து
தவறுகளை மட்டும்
தடயங்களாய்த்தேடி
திரட்டுகிறீர்களே...
நானோவெனில் -
நீங்களெனை நேசிக்கும்
நிர்மல நிமிஷங்களை
வைர முத்துகளாய் - என்
உள்ளிதயப் பேழையில்
பத்திரப்படுத்துகிறேன்.
ஈந்தஎன் கரங்களை வெட்ட
எத்தனிக்கும் நீங்கள்
வாய்களால் மட்டும்
இரக்கப்பிச்சை ஈகிறீர்கள்.
எனினும் -
எனக்கு நீங்கள்
ஆசிரியர்களே...
'நன்மை செய்வோர்க்கும்
தீமை-விஷமே
பிரதிபலனாய்க்கிடைக்கலாம்' எனும்
பேருண்மையைப்
புகட்டும் நீங்கள்
சிறந்த
சாஸ்திரிகளே.
மேகம் இருந்திடினும்
கடல்கள் மிராண்டிடினும்
சூரியன் பகைத்திடுவானோ?
நீங்களெனை
அடித்திடினும்
சிலுவையில்
அறைந்திடினும்
ஏசுவைப்போல்
தொடர்ந்து மன்னிப்பேன்.
ஏனெனில் -
நானொரு குரு.