பயணத் தடை

(23ஆம் புலிகேசி படத்தினை மனதினில் வைத்துக் கொண்டு தொடருங்கள்)

முன்னொரு காலத்தில் சாய்லான் எனும் ஒரு நாடு. அந்நாட்டை கோஹிந்தநாம எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். ஆட்களை கொல்லும் விச கிருமிகளின் தாக்கம் ஆரம்பித்திருந்த காலம் அது. தொடுதல் மூலம் மக்களிடையே பரம்பலாகிக் கொண்டிருந்தது. சுகதார துறை, யானைப்படை, குதிரைபடை, காளான் படை என அனைத்து படையினருடனும் இணைந்து எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

ஒரு நாள்,
அரச சபையில்,

தளபதி - மன்னா... மன்னா... எங்கே இருக்கிறீங்கள் மன்னா...

மன்னர் - என்ன தளபதியாரே... ஏன் இப்படி விழுந்தடித்து வருகிறீர்?

(மன்னர் ஓர் அறையினுள் இருந்து வெளியே வருகிறார்)

தளபதி - இந்த சுகாதார அமைச்சர் என்னை நிம்மதியாய் இருக்கவிடுகிறார் இல்லையே மன்னா...
(அருகில் நிற்கும் சுகாதார அமைச்சரை பார்க்கிறார்.)

மன்னர் - உமக்கு என்ன தான் பிரச்சினை சுங்கினி அமைச்சரே...

சுகாதார அமைச்சர் - சுகாதார அமைச்சர் மன்னா...

மன்னர் - ஏதோ ஒரு அமைச்சர்... சொல்ல வந்ததை சொல்லும் முதலில்

சுகாதார அமைச்சர் - எனக்கு கீழ் இருக்கும் ஊழியர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிடுகிறார்கள் இல்லை மன்னா...

மன்னர் - நீங்கள் இருவரும் என்னை நிம்மதியாய் இருக்க விடுகிறீர்கள் இல்லை.

சுகாதார அமைச்சர் - விச கிருமிகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மன்னா... இப்போதே தொற்றுவீதம் மூவாயிரத்தை தாண்டி விட்டது...

மன்னர் - என்னது.... மூவாயிரத்தை தாண்டிவிட்டதா?

சுகாதார அமைச்சர் - ஆமாம் மன்னா... இப்போதைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறில் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். வருகின்ற வாரத்தி இருந்து மூவாயிரத்தில் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

மன்னர் - சரி... அதற்கு இப்போ என்ன செய்யவேண்டும்

சுகாதார அமைச்சர் - இரண்டு வாரங்களாவது நாட்டினை முடக்க உத்தரவு தர வேண்டும் மன்னா...

மன்னர் - என்னைய்யா உம்மோடு இதே வேலையாய் போய்ச்சு... அவர்கள் சொல்லுவது போல் நாட்டினை முடக்கினால் நிறைய பிரச்சினைகள் வருமே... என்ன செய்யலாம்...
(யோசனையில் மூழ்குகின்றார் மன்னர்)

நிதி அமைச்சர் - மன்னா... மன்னா... நம்மை நன்றாகவே ஏமாற்றிவிட்டார்கள் அந்த அயல்நாட்டு மன்னர்.
(வேக வேகமாய் வருகிறார் நிதி அமைச்சர்)

மன்னர் - என்னய்யா புது குழப்பம்... புரியும் படி சொல்லும்

நிதி அமைச்சர் - ஐந்நூறு கோடி ரூபாய் தந்ததாக சொன்னார்கள் அல்லவா... அதில் ஆயிரத்து ஐநூறு ரூபாய் குறைவாக இருக்கின்றது. ஏமாந்துவிட்டோம் மன்னா...

மன்னர் - நேர காலம் தெரியாமல் நீர் வேற...

(அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொள்கிறார்.)

மன்னர் - நாட்டினை முடக்கினால் பணம் கொடுக்க வேண்டி இருக்கும் இல்லையா?

நிதி அமைச்சர் - ஆமாம் ஆமாம்... ரூபாய் ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் மன்னா. அதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என்றால் பாருங்களேன்

மன்னர் - அதென்னய்யா ஐந்தாயிரம்...

நிதி அமைச்சர் - ஐந்து பவுண், ஐந்து லட்சம், ஐந்தாயிரம் என ஐந்து மக்களுக்கு பழகிவிட்ட ராசியான இலக்கம் மன்னா...

சுகாதார அமைச்சர் - ரூபாய் ஐந்தாயிரம் எல்லாம் கொடுக்க தேவையில்லை மன்னா... எமது அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ஏற்கனவே ஒரு குடும்பத்துக்கு தேவையான உணவு அளவீடு பற்றி கூறியிருக்கிறார். அவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் மன்னா...

மன்னர் - சரி நீங்கள் கொஞ்சம் யோசியுங்கள். உள்ளே வெளிநாட்டு மந்திரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடக்கின்றது. பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.

(மன்னர் உள்ளே செல்கிறார்)

சுகாதார அமைச்சர் - எனக்கென்னவோ நாட்டினை முடக்கினால் நல்லது போல் தெரிகின்றது

தளபதி - ஆமாமாம்... அது தான் நல்லது. அப்போ தான் எனக்கும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்

நிதி அமைச்சர் - ஆமாமாம்... கண்டிப்பாக முடக்கத் தான் வேண்டும்.

(சுகாதார அமைச்சரும் தளபதியாரும் ஆச்சரியத்துடன் அவரை பார்க்கிறார்கள்)

தளபதி - நாட்டை முடக்குவதில் அப்பிடி உமக்கு என்ன தேவை வேண்டி இருக்கின்றது அமைச்சரே... இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்

நிதி அமைச்சர் - அப்போ தானே ஐந்தாயிரம் ரூபாய் பணம் மக்களுக்கு கொடுக்கலாம். அந்த பணத்துக்கு நான் பெரிய திட்டமே போட்டு வைத்திருக்கின்றேன்.

(சுகாதார அமைச்சரும் தளபதியாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர்)

மன்னர் வெளிநாட்டு ஆலோசகருடன் உள்ளே வருகிறார். அனைவரும் ஆலோசகருக்கு நாட்டு நிலைமையை விவரிக்கின்றனர்

ஆலோசகர் - நான் சொல்கிற படி செய்யுங்கள். எல்லாம் சரி வரும்.

1. முதலில் பாடசாலை, தனியார் வகுப்புக்கள், உயர் நிலை கல்வி செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துங்கள்.
(நாட்டின் எதிர்கால சந்ததியின் கல்வி அறிவு வீதத்தினை குறைக்க வேண்டும். அதற்கு இது தான் சரியான வழி என மனதுக்குள் நினைக்கிறார்)

2. அரச அலுவலகங்களில் வேலை பார்ப்போரை கால்வாசியாக குறையுங்கள்
(எல்லாம் முடிந்து வேலை தொடங்கும் போது எப்பிடியும் உதவிக்கு என எமது நாட்டினரை உள்ளே புகுத்திக் கொள்ளலாம்)

3. திரை அரங்கு, களியாட்ட நிகழ்வுகள், திருமணங்கள் அனைத்தையும் தடை பண்ணுங்கள்.
(மக்களை சந்தோசமாக இருக்கவிடக்கூடாது)

மன்னர் - குறுக்கீடு செய்வதற்கு மன்னிக்கவும்.... இந்த திருமண விடயத்தில் ஆட்களை குறைத்து அனுமதிக்கலாமா? இல்லாவிடில் கூடிவந்த திருமணம் நடக்கவில்லையே என பொடி பொட்டையள் எனக்கு சாபம் போட்டுவிடுவார்கள்.

ஆலோசகர் - சரி உங்கள் விருப்பம். அடுத்து ஊரடங்கு சட்டத்தினை நடைமுறை செய்யுங்கள்.
(மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குழைக்க வேண்டும்)

மன்னர் - அதில் தான் ஒரு சிக்கல் இருக்கின்றது. முற்று முழுதாக முடக்கினால் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஆலோசகர் சிறிது நேரம் யோசனையில் மூழ்கினார்

ஆலோசகர் - முதலில் தூர தேசங்களுக்கிடையிலான போக்குவரத்தினை நிறுத்துங்கள். இரண்டு நாட்களின் பின்னர், இரண்டு வாரங்களுக்கு இரவினில் நடமாடுவதற்கு தடை போடுங்கள்.

சுகாதார அமைச்சர் - இரவில் சும்மாவே மக்கள் நித்திரையில் இருப்பார்கள். ஏன் அந்த விசக் கிருமியும் கூட நித்திரையில் இருக்கும். அதற்கு எதற்கு புதிதாக தடை போடுவான்.

ஆலோசகர் - அப்பிடியென்றால் நீங்களே நடவடிக்கைகளை எடுங்கள். என்னை எதற்கு இங்கே வரவழைத்தீர்கள்

(கோபத்துடன் எழும்ப தயாரானார்)

மன்னர் - ஐயோ... சுங்குனி அமைச்சரே...

சுகாதார அமைச்சர் - சுகாதார அமைச்சர் மன்னா

மன்னர் - இப்போ அதுவா முக்கியம். கொஞ்சம் வாயை பொத்திக்கொண்டு இரும். குறுக்க குறுக்க பேசிக்கொண்டிருக்காமல்... ஆலோசகரே... நீங்கள் தொடருங்கள். அவர் இனி கதைக்க மாட்டார்.

ஆலோசகர் - சனி, ஞாயிறுகளில் சனம் வெளியில் நடமாடக் கூடாது என தடை உத்தரவை போடுங்கள். இதை தொடர்வதா வேண்டாமா என பின்னர் யோசிக்கலாம்.

தளபதி - வருகின்ற வெள்ளிக்கிழமை லிஸ்மு இனத்தவரின் கொண்டாட்ட தினம் வேறு வருகின்றது.

ஆலோசகர் - (அவர்களது பணமும் இங்கே வேலை செய்கின்றது. அவர்களையும் அடக்கி வைக்க வேண்டும்) அப்பிடியானால் வெள்ளிக்கிழமை முதல் தடை உத்தரவை பிறப்பியுங்கள். இந்த நிலையில் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் வேண்டாம்.

மன்னர் - சரி தளபதியாரே... இதன் படியே அறிவித்துவிடுங்கள். சுங்கினி அமைச்சரே உங்கள் பிரச்சனை தீர்ந்தது தானே...

தளபதி - அப்போ இந்த மூன்று நாளும் ஊரடங்கு அமுலாகும் அப்பிடி தானே...

ஆலோசகர் - இல்லை... இது ஊரடங்கு இல்லை. மக்கள் வெளியே நடமாட தடை. அவ்வளவு தான்.

தளபதி - கிட்டத்தட்ட ஊரடங்கு மாதிரி தானே

ஆலோசகர் - ஆமாம்... ஆனால் நீங்கள் ஊரடங்கு என்று சொன்னால் பணம் கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் ஊரடங்கு என்று சொல்ல வேண்டாம்.

மன்னர் - ஆமாம்... பணம் முக்கியம் தளபதியாரே... ஊரடங்கு, நாடு முடக்கல் என்ற சொல் பிரயோகிக்க வேண்டாம். மக்கள் நடமாட தடை. வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என்று சொல்லும்.

சுகாதார அமைச்சர் - ஊரடங்கு என்று சொன்னாலும் மக்கள் நடமாடுவார்கள் தான் . இது என்னமோ குழப்பத்தை தான் உருவாக்கும் என்று நினைக்கிறேன்.

மன்னர் - சுங்கினி அமைச்சரே... அது எங்கள் பிரச்சினை இல்லை. மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்காவிட்டால் அதுக்கு அரசு எப்பிடி பொறுப்பேற்க்கும். உங்கள் துறையினருக்கு விளங்கப்படுத்த வேண்டியது உம்மோட பிரச்சினை.

ஆலோசகர் - சுகாதார அமைச்சரே... தடுப்பூசி வேலைகள் சீராக நடக்கின்றது தானே... சிக்கல் ஒன்றும் இல்லையே...

சுகாதார அமைச்சர் - சீராக போய்க்கொண்டு இருக்கின்றது. ஆளணி பற்றாக்குறை தான் இருக்கின்றது. அனுபவம் இல்லாதவர்களை திடீரென்று புகுத்த முடியாது இல்லையா...

ஆலோசகர் - மன்னரே... இது விளையாட்டு இல்லை. இரண்டு மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டேயாகனும். இல்லாவிடில் முழு பலனும் கிடைக்காமல் போய்விடும். இறப்பு வீதமும் அதிகரித்துவிடும். ஆளணி இல்லாவிடில் சொல்லுங்கள். எமது நாட்டில் இருந்து ஆயிரம் பேரை வரவழைத்து தருகிறேன். சீக்கிரமே ஆகவேண்டியதை பாருங்கள்.

மன்னர் - நானே உதவி கேட்க இருந்தேன். ஆனால், இரண்டு வாரத்துக்காக அவர்களை வரவழைப்பது சரியில்லை அல்லவா...

ஆலோசகர் - இந்த நாடு எங்களுடயை நாடு போன்றது தான். இங்குள்ள மக்கள் நலன் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கு. வந்த வேலை முடிந்ததும் ஒரு பகுதியினரை அனுப்பிவிட்டு மற்றையோரை வைத்து இங்கு வேலை பார்க்கும் எமது நாட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கலாம். உங்கள் மருந்துகளால் அவர்களுக்கு ஒவ்வாமை வருகின்றது.

மன்னர் - அடடே... அருமையான திட்டம். அப்பிடியே செயல்படுத்திவிடுவோம்.

மன்னரும் ஆலோசகரும் உள்ளே செல்கின்றனர்.

தளபதி - என்ன அமைச்சரே... இது சரிப்பட்டு வரும் என்று நினைக்கிறீரா?

சுகாதார அமைச்சர் - நம்மை பைத்தியகார முட்டாள்கள் என்று மக்கள் சொல்லப்போவது மட்டும் உண்மை. வாரும் போவோம்.

கூட்டம் கலைந்தது.

((((கற்பனை. கற்பனையை தவிர வேறொன்றும் இல்லை))))

எழுதியவர் : மணிவாசன் (18-May-21, 2:45 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 159

மேலே