கட்டுப்பாடு

கட்டுப்பாடு
ஏலே! செவலை உன் பொண்டாடிக்கு பிரசவ வலி வந்திருச்சாம்டா என்ற காட்டமுத்து மாமாவின் குரல் கேட்டு
மழையில்லாத வறண்ட பூமியில் தண்ணிருக்காக கிணறு தோண்டி கொண்டிருந்த செவலை சூடு மறந்து வெறும் காலில் ஓடினான்.ஊா் எல்லையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள அவன் நிலத்திலிருந்து முதலியார் தோப்பு,பெரிய வரிதாரா் பண்ணையார் வீடு,பள்ளிக்கூடம் கடந்து அவன் வீட்டிற்கு போவதற்குள் குழந்தை நல்லபடியா பிறந்தா போதும் என்று வேண்டியபடி ஓடினான்.
பள்ளிக்கூடம் போக பயந்து சேவல் கூவுறதுக்கு முன்னாடி வீட்ட விட்டு போறவன் கோழி அடைஞ்சதுக்கு அப்புறம் தான் வருவான்.ஊரே திருவிழா கோலத்துல பங்குனி உத்திரம் குலதெய்வ கோவிலுக்கு போக வண்டி கட்டிக்கிட்டு இருந்த செவலைய பார்த்த அவன் அம்மா அடுத்த வருஷமாச்சு பொங்க வைக்க ஒருத்தி வரணும் என்னால அலைய முடியலைன்னு சொன்னாள்.
அதுக்கு கொஞ்சமாவது படிச்சிருக்கணும் ஊரு பயலுக எல்லாம் டவுண்ல வேலைக்கு போகுது இவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பான்னு அப்பா வெள்ளந்தியா சொல்ல.
என் தம்பி மவளத்தான் கட்டணும்.இன்னைக்கே கோவில வைச்சு கேட்டு புடுவேன்லன்னு அம்மா சொன்ன வாா்த்தை கேட்டு தானே காளையென நினைச்சி வண்டிய மணிமேகலை நினைப்போடு ஓட்டினான் செவலை.
வருஷம் பத்தாச்சு கூடப்பிறந்தவள டவுண் மாப்பிளைக்கு கட்டிக்கொடுக்க வருஷம் தவறாம தாய்மாமா சீர் செய்றான் அடுத்தது ஒரு ஆண்பிள்ளை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு.
ஆனா இங்கிட்டு ஒரு வாரிசு இல்லையேன்னு அவன் அம்மா வசைப்பாடாத நாளில்லை.
இன்னைக்கு அதுக்கான விடிவுகாலம் பிறந்திருச்சு.தன்னோட குழந்தையை பார்க்க ஓடி வந்தவன் வாசலில் இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் பதறினான்.ஒரு கிழவி வந்து உனக்கு இப்படியாப்பா நடக்கணும் இரு இந்தா வரேன்னு சொல்லிட்டு போக புரியாம முழிச்சவன் திண்ணையில போய் உட்கார அவன் அம்மா வந்து இவள போய் உனக்கு கட்டி வைச்சிடேனே என்று அழுறதப்பார்த்து உள்ளே போனான்.
இளம்பிஞ்சு ஒன்றுமறியாமல் கண்களை உருட்டி அவனைப் பார்த்தது.ஆனால் கால்கள் ஊனமாய் இருக்க பார்த்தவன் அதிர்ந்தான்.போன கிழவி பாலாடையில் கள்ளிப்பால் எடுத்து வர பொம்பளபிள்ளை ஊனமா பிறந்தா எவன் கட்டுவான்னு பிஞ்சு குழந்தையை கையிலெடுத்தப்போது ஆவேசமாய் பாலாடையை தட்டினான்.
மணிமேகலையோ அவன் கையை பிடித்து பத்துமாதம் சுமந்து பெத்தது.நான் கஷ்டப்பட்டுனாலும் வளர்த்துக்கிறேன்.நீங்க இன்னொரு கல்யாண் வேணாலும் பண்ணிக்கோங்க.சொந்தத்துல கல்யாணம் பண்ணினது தப்புன்னு முகாமுக்கு வந்த டாக்டர் சொன்னது உண்மையா போச்சு.நம்ம பண்ண தப்புக்கு அந்த பிஞ்சு என்ன பண்ணும் என்று கதறினாள்.ஆனால் அவன் அம்மாவின் புலம்பலோ நிற்கவேயில்லை.
அடுத்தநாள் காலை செவலையை காணவில்லை என்று தேடும் போது சோர்வாக வந்து கட்டிலில் அமர்ந்தான்.பக்கத்தில் அரிசி,பருப்பு பையும்,பணமும் கிடந்தது.
ஒன்னும் இல்லாதவளுக்கு வகையா சமைக்க வாங்கிட்டு வந்தியாடா என்று அம்மா வசைபாட ஆரம்பித்தாள்.திடீரென ஆவேசமாய் எழுந்தவன் பொம்பளைங்களுக்கு மட்டும்தான் எல்லா கட்டுப்பாடுமா அதான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திட்டேன்.எங்களுக்கு இந்த ஒரு குழந்தை போதும் அவள மகாராணி போல வளர்த்துப்போம் என்று கூறிய செவலையின் கண்களில் இருந்து வழிந்த நீர் நிலத்தில் விழ இடி மின்னலுடன் பெய்யாத மழையும் அடைமழையாய் வாய்க்காலில் ஆனந்த பெருக்கெடுத்து ஓடியது.

க.சுஜிதா,
சென்னை.

எழுதியவர் : சுஜிதா (10-Jun-21, 6:45 pm)
சேர்த்தது : Sujitha 92
Tanglish : kattuppaadu
பார்வை : 149

மேலே