சிந்தனை இல்லாத மனிதர்கள் இல்லை
நான் எவ்வளவோ மனிதர்களைக் கண்டேன்
குணமே இல்லாதவர்களைக் காணவில்லை!
நான் பலரில் கோபம், கொதிப்பை கண்டேன்
கோபம் மட்டும் கொள்பவரை காணவில்லை!
நயவஞ்சக சிரிப்புகளைப் பலரில் கண்டேன்
சிரிக்காமலே இருப்போரைக் காணவில்லை!
அடுத்தவரை குறை கூறுவோரைக் கண்டேன்
குறைகள் மட்டுமே புரிவதைக் காணவில்லை
தீங்கு பல செய்யும் மனிதர்களைக் கண்டேன்
தீங்கிழைப்பதை தொழிலாய் காணவில்லை!
கால் வாரிவிடும் பேர்வழிகளைக் கண்டேன்
கால் தூசுக்கு ஆகாதவரைக் காணவில்லை!
அரட்டையில் காலம் கழிப்பவரைக் கண்டேன்
அரட்டையால் வீழ்ந்தவரைக் காணவில்லை!
சிந்தித்து செயல்படுபவரை நான் கண்டேன்
சிந்தித்து வாழாதவரை நான் காணவில்லை!
பொய்சொல்லி ஏய்ப்பவர்களைக் கண்டேன்
பொய் பேசியே வாழ்பவர்கள் காணவில்லை!
நல்ல சிந்தனைகளைப் பலரிடமும் கண்டேன்
சிந்தனை இல்லா எவரையும் காணவில்லை!
ஆனந்த ராம்