உடனே விழி

*உதவாதினி ஒரு தாமதம்* *உடனே விழி:*

( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்*

*வாய்ப்பாடு:*

*மா மா காய்*
*...மா மா காய்* )


நேற்றும் இன்றும் காய்ச்சலென்றே
... நெற்றிச் சூட்டைப் பார்க்கின்றாய் !
போற்றும் பெற்றோர் மதிக்காமல்
... புரண்டு நீயும் படுக்கின்றாய் !
தோற்கும் என்றே நினைத்துவிட்டு
...தொற்றை வீட்டில் பரப்புகிறாய் !
சேற்றை அள்ளிப் பூசுதல்போல்
... சிகிச்சை ஏற்க ஏன்மறுத்தாய்?


அரசும் சொன்ன அறிவுரையை
...அறிவாய் கேட்க மறுக்கின்றாய் !
பரவும் தொற்றை மதிக்காமல்
...பரப்ப நீயும் காரணமோ !
அரணாய் காக்கும் தடுப்பூசி
... அதையும் போட மறுக்கின்றாய் !
வரமாய் கிடைக்கும் இலவசத்தை
...வாரி அணைக்க தாமதமேன்?

கண்முன் விபத்தைக் கண்டாலே
...காணும் பயமோ உன்னிடமே !
மண்ணில் பிறந்த மானுடனே
...மனிதம் உன்னுள் மாறியதா?
கண்ணீர் விட்டுப் பயனென்ன?
... கண்டால் ஓடி ஒளியாமல்
கொண்ட அறிவின் துணைகொண்டு !
...கொல்லும் இழப்பைத் தவிர்க்கலாமே !

ஆண்டில் லட்சம் விழிகிடைத்தால்
...ஆங்கே பலரோ விழித்திடுவர் !
மாண்டு நீயும் போனபின்னே
...மாயும் விழியால் பயனுமென்ன?
தாண்டிக் குதிக்கும் வயதினிலே
...தானம் செய்வாய் கண்களையே !
வேண்டும் விழிகள் உன்வழியாய்
... விரைந்து கிடைக்க தாமதமேன்?


தொற்றில் சிக்கித் தனித்திருக்க
...துட்டு மின்றி பலருண்டு !
பெற்றோ ரற்ற அனாதைகளோ
... பிரிந்தே இங்கே கிடப்பதுண்டே!
உற்றோர் பலரும் வெறுத்தாலும்
...ஊரார் இரங்கிச் சமைப்பதைப்பார் !
கற்ற நீயும் உதவிசெய்ய
... கனிவாய் வருவாய் விழிப்புடனே !

தனிமை எல்லாம் மனிதனுக்கே
... தவிக்கும் தனிமை விலங்கிற்கேன்?
மனிதா நீயும் மனதுவைத்தால்
... மாக்கள் கூட பசியாறும் !
இனியும் சிறிதோ கடத்தாமல்
... ஈவாய் கொஞ்சம் விலங்கிற்கும் !
இனிமை நிறைந்த மனிதர்களே
... இனியும் வேண்டாம் தாமதமே

எழுதியவர் : PASALI (21-Jun-21, 10:42 am)
சேர்த்தது : PASALI
Tanglish : udanae vayili
பார்வை : 270

மேலே