உழவுத் தொழிலே தெய்வம்

ஆசிரியப்பா
அஞ்சு ஏக்கர் நிலத்தை கொஞ்சமும்
அஞ்சாப் பதினைந் துயேரை வைத்து
புழுதி யோட்டி தண்ணீர் தேக்கி
சேடை உழுது பரம்பை யடித்தேன்
நாத்தோர் பக்கல் விட்டு தக்க
நாளில் பிடுங்கி நடவு செய்தேன்
ஏருக் கும்பின் சேடை பரம்பு
நடவுக் கெனபல் பாயிரம் செலவு
உரமும் மருந்தும் தூவித் தெளித்தேன்
தவறா மடையைக் கட்டி தண்ணீர்
பாய்ச்சி களையும் பிடுங்கி காத்தேன்
எத்தனை ஆயிரம் கணக்கு
வைக்கா தேசெல விட்டேன் பாரே

கதிரும் பால்பிடித் துமுற்றி சாய
ஆளுக்கு அனுப்ப விடியர் காலை
அறுவடை களைகட் டிற்று மதியம்
கூலியாட் களுக்கு குஸ்கா கேட்க
குறையா போட்டேன் மாலைக் குள்ளே
கதிரை கட்டாய் கட்டி போட்டார்
மறுநாள் கட்டுப் போரை
அடிக்க ஆளை நியமித் தேனே

மறுநாள் போரடிக் கவாரம் பிக்க
ஒருவர் பின்னொ ருவராய் மேரை
தலையா ரிக்கு பத்து கட்டு
தோட்டிக் குபத்து நாவி தனுக்கு
பத்து வண்ணா னுக்குப் பத்துடன்
ஐந்து கோயில் ஐயருக் குமைந்து
இப்படி எல்லோர்க் கும்படி யளநது
மிச்சத் தையடித் துப்புனை யோட்டி
மூட்டை ஐம்பதை வீடு சேத்து
கணக்கு பார்த்தேன் எனக்கு
நட்டம் பத்து ஆயிரத் துக்குமேலே
..........

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jul-21, 1:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1850

மேலே