இளங்குமரனார் என்றும் வாழ்வார் கவிஞர் இரா இரவி

இளங்குமரனார் என்றும் வாழ்வார்!
கவிஞர் இரா. இரவி !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னத நூல்களில் என்றும் வாழ்வார்!

நூற்றாண்டு கடந்து வாழ்வார் என எண்ணினோம்
நூற்றாண்டுக்கு முன்பே இயற்கை பறித்து விட்டது!

எண்ணம் சொல் செயல் அனைத்தும் தமிழாகவே
என்றும் வாழ்ந்திட்ட இனியவர் பண்பாளர் !

யாரிடமும் அதிர்ந்து பேசிடாத மென்மையாளர்
யாரிடமும் சினம் கொண்டு பார்த்ததே இல்லை!

மாதாமாதம் மணியம்மை பள்ளியில் விழாவில்
மணியான தமிழ் ஆய்வுரைகள் நல்கியவர்!

உடலின் நிறமும் வெள்ளை உள்ளமும் வெள்ளை
உடுத்தும் உடையும் வெள்ளையாக வாழ்ந்த வேந்தர்!

தமிழ்வழி திருமணங்கள் பல நடத்தி வைத்தவர்
தமிழுக்காக இறுதி மூச்சு வரை உழைத்த நல்லவர்!

விருதுகள் பரிசுகள் பாராட்டுகள் பெற்றபோதும்
விருதை தலையில் என்றும் ஏற்றிக் கொள்ளாதவர்!

எல்லோருடனும் அன்பாகப் பேசிடும் பேரறிஞர்
எங்கு சென்றபோதும் எளிமையை என்றும் விரும்பியவர்!

ஆடம்பரத்தை விரும்பாது அடக்கமாக வாழ்ந்தவர்
ஆரவாரமின்றி அமைதியாக தமிழ்ப்பணி ஆற்றியவர்!

தமிழ்வழிக் கல்விக்கு என்றும் குரல் கொடுத்தவர்
தமிழ் மேன்மையடைய தொண்டுகள் பல புரிந்தவர்!

சொல் ஆய்வு நடத்தி நூல்கள் வடித்தவர்
சொல் செயல் வேறுபாடின்றி வாழ்க்கை நடத்தியவர்!

திருக்குறள் குறித்தும் நூல்கள் பல யாத்தவர்
திருக்குறளின் பெருமையை எல்லோருக்கும் உணர்த்தியவர்

பேச்சு எழுத்து இருதுறையிலும் முத்திரை பதித்தவர்
பாரினில் பைந்தமிழ் மூதறிஞராக வலம் வந்தவர்!

தமிழ் உள்ளவரை தமிழறிஞர் இளங்குமரனார் வாழ்வார்
தமிழ்த் தொண்டர்களுக்கு மரணம் என்றும் இல்லை!

உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
அவருக்கு இணை இங்கு எவருமில்லை உண்மை!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (26-Jul-21, 7:55 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 40

மேலே